

மக்கள் தொகையை கட்டுப் படுத்த உத்தர பிரதேச அரசு புதிய மசோதாவை வரையறுத்துள்ளது. இதன்படி 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியாது. அரசு பணி கிடைக்காது. மேலும் ஒரு குழந்தை மட்டும் பெற்றுக் கொண்டால் கூடுதல் சலுகைகளும் கிடைக்கும் என்பது போன்ற ஷரத்துகள் மசோதாவில் இடம் பெற்றுள்ளன.
இதுகுறித்து விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் செயல் தலைவர் அலோக் குமார் நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்ப தாவது: மக்கள் தொகையை கட்டுப்படுத்த இரு குழந்தை கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்பதை விஎச்பி ஆதரிக்கிறது. ஆனால் ஒரு குழந்தை மட்டும்பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்துவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த கொள்கையை கைவிட வேண்டுகிறேன்.
ஒரு குழந்தையை மட்டும் வளர்க்கும் பெற்றோர், எதிர் பாராத காரணத்தால் அந்த குழந்தையை இழக்க நேரிட்டால் பெற்றோர் பெரும் துயரத்தை எதிர்கொள்ள நேரிடும்.
ஒரு குழந்தை கொள்கையால் இந்துக்களின் எண்ணிக்கை குறையும் ஆபத்து உள்ளது. உதாரணத்துக்கு கேரளா, அசாமில் முஸ்லிம்களின் மக்கள் தொகை கணிசமாக அதிகரித்து வருகிறது. உத்தர பிரதேசத்தில் அதுபோன்ற சூழ்நிலை ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.