

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் தீவிரவாதிகள் தங்கியிருந்த வீட்டை போலீஸார் சுற்றிவளைத்தனர். அப்போது போலீஸாருக்கும் தீவிரவாதி களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இறுதியில் 4 தீவிரவாதிகளை போலீ ஸார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது. சமீபத்தில் புத்தூரில் பதுங்கி இருந்த பன்னா இஸ்மாயில், மாலிக் ஆகியோரை தமிழக-ஆந்திர போலீஸார் கைது செய்தனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் மதனபள்ளியில் காஷ்மீர் தீவிரவாதி குரோஷ் என்பவரை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.
தற்போது தீவிரவாதிகளாக கருதப்படும் 4 பேரை ஹைதராபாத் போலீஸார் மதனபல்லியில் சுற்றிவளைத்து கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதியில் இருந்து 90 கி.மீ தூரமுள்ள மதனபல்லியில் சில மாதங்களுக்கு முன்னர் மும்பையிலிருந்து ஐந்து இளைஞர்கள் வந்து தங்கினர். இவர்கள் திருமணத்திற்கு பெண் பார்க்க வந்ததாக அக்கம் பக்கத்தில் கூறி உள்ளனர். இதனால் இவர்கள் மீது யாருக்கும் சந்தேகம் வரவில்லை. இந்நிலையில் ஹைதராபாத்தில் இருந்து வந்த விஜிலென்ஸ் போலீஸார் இவர்கள் இருக்கும் வீட்டை வெள்ளிக்கிழமை சுற்றி வளைத்தனர்.
இவர்களை சரணடையும்படி எச்சரித்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. அப்போது திடீரென போலீஸாரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். போலீஸாரும் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனர். சுமார் 20 நிமிடங்கள் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
பின்னர் தீவிரவாதிகளாக கருதப்படும் ஐந்து பேரில் 4 பேரை போலீஸார் கைது செய்தனர். ஒருவர் தப்பி விட்டதாகத் தெரிகிறது. இவர்களுக்கு உசேன் என்பவன் தலைவனாக செயல்பட்டு வருவதாகவும் அவர்கள் மீது சுமார் 150-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர். இவர்களை போலீஸார் ஹைதராபாத்துக்கு பாது காப்பாக கொண்டு சென்றனர்.