

மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரிக்கு பதில் புதியவரை நியமிக்க காங்கிரஸ் தலைமை ஆலோசித்து வருகிறது. அதேசமயம் இந்த பதவிக்கு ராகுல் காந்தி நியமிக்கப்பட வாய்ப்பில்லை என தெரிய வந்துள்ளது.
2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டுமே வென்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியமல் போனது. கடந்த 2014-ம் ஆண்டில் 44 இடங்கள் பெற்ற நிலையில் அதைக்காட்டிலும் சிறிது அதிகமான இடங்களை இந்தமுறை பெற்றது. தொடர்ந்து 2-வது முறையாக எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தைப் பெற முடியவில்லை.
இந்தத் தோல்வி குறித்து ஆய்வு செய்ய காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட அதிகாரம் கொண்ட செயற்குழுக்கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் மூத்த தலைவர்களை கடுமையாக சாடிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தோல்விக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அதன் பிறகு கட்சித் தலைவர் பதவியை சோனியா காந்தி தற்காலிகமாக ஏற்றுக் கொண்டார். காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவர் பதவியை அவர் வகிக்கக்கூடும் என தகவல் வெளியானது. ஆனால் அந்த பதவிக்கு மீண்டும் சோனியா காந்தியே தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர் நீண்ட இழுபறிக்கு பின்னர் மக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டார். எனினும் இரண்டு ஆண்டுகள் முடிந்தநிலையில் அவரது செயல்பாடு எதிர்பார்த்த அளவு இல்லை
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஒரு இடத்தில் கூட காங்கிரஸ் கட்சியை வெல்ல வைக்க ஆதிர் ரஞ்சன் சவுத்ரியால் முடியவில்லை. அதேசமயம் அந்த தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கவும் அவர் எதி்ரப்பு தெரிவித்தார்.
இதனால் கட்சித் தலைமை ஆதிர் ரஞ்சன் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. மக்களவை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு புதியவரை நியமிக்க ஆலோசித்து வருகிறது. இந்த பதவிக்கு ராகுல் காந்தி பெயர் பரிசீலிக்கப்பட்டதாக தெரிகிறது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இருவரும், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்க வேண்டும் என்று ஆர்வத்துடன் இருந்ததாகவும், அதற்காக ராகுலிடம் பேசி வருவதாகவும் தகவல் வெளியானது. ஆனால், ராகுல் காந்தி விரும்பவில்லை என கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அந்த பதவிக்கு வேறு சிலரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அதில் சசிதரூர், உத்தம் குமார் ரெட்டி, மணீஷ் திவாரி, கவுரவ் கோகோய், ரண்வீத் சிங் உள்ளிட்ட பெயர்கள் பரிசீலிக்கப்படுவதாக தெரிகிறது. நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத் தொடர் ஜூலை 19-ம் தேதி தொடங்க இருப்பதால் அதற்கு முன்பாக இறுதி முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.