திருப்பதி வனப்பகுதியில் நள்ளிரவில் துப்பாக்கிச் சூடு: தமிழகத்தைச் சேர்ந்த 2 பேர் கைது

திருப்பதி வனப்பகுதியில் நள்ளிரவில் துப்பாக்கிச் சூடு: தமிழகத்தைச் சேர்ந்த 2 பேர் கைது
Updated on
1 min read

திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தி, செம்மரம் கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த 2 பேரை அதிரடிப் படை போலீஸார் கைது செய் தனர். இவர்களிடமிருந்து 23 செம்மரங்களை பறிமுதல் செய்தனர்.

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு சுமார் 2 மணியளவில் அதிரடிப் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திருப்பதி  வெங்கடேஸ்வரா மிருகக்காட்சி சாலை அருகே எஸ்.வி. நகர் பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 32 கூலித் தொழிலாளர்கள் செம்மரங்களை வெட்டி கடத்திக் கொண்டிருந்தனர்.

இதைப் பார்த்த அதிரடிப் படையினர், தொழிலாளர்களை சரண் அடையும்படி எச்சரித்த னர். ஆனால் அவர்கள் போலீஸார் மிது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

இதில் அதிரடிப்படையைச் சேர்ந்த ரிசர்வ் சப் இன்ஸ் பெக்டர் வாசுவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போலீஸார் 2 ரவுண்ட் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதையடுத்து அவர்கள் செம்மரங்களை போட்டு விட்டு தப்பி ஓடினர். இவர்களை விரட்டிச் சென்றதில், திரு வண்ணாமலை மாவட்டம், போளூரைச் சேர்ந்த மணி (40), பெரிய பையன் (45) ஆகிய இருவர் சிக்கினர். மேலும் 23 செம்மரங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அதிரடிப் படை போலீஸ் டிஜிபி காந்தா ராவ் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in