

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதற்காக மாநில அரசு கொண்டுவந்த மக்கள்தொகை கட்டுப்பாட்டு வரைவு மசோதாவுக்கு ஆர்எஸ்எஸ் ஆதரவு பெற்ற, விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு தெரிவித்துள்ளது.
2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால் அரசு வேலை கிடையாது, அரசின் சலுகைகள் மறுக்கப்படும் என்று வரைவு மசோதாவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. உலக மக்கள்தொகை நாளான நேற்று இந்த வரைவு மசோதாவை உத்தரப் பிரதேச அரசு வெளியிட்டது.
இந்நிலையில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார் உத்தரப் பிரதேச அரசின் சட்ட ஆணையத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
''உத்தரப் பிரதேச மாநிலத்தில் மக்கள்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்த மாநில அரசு கொண்டுவந்துள்ள சட்ட வரைவு மசோதா குழந்தைகள் மீது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சமூகத்தினரிடையே சமனற்ற நிலையை உருவாக்கிவிடும். குடும்பக் கட்டுப்பாடு உள்ளிட்ட தடுப்பு முறைகளுக்குப் பல்வேறு சமூகத்தினரும் வெவ்வேறு விதமாக எதிர்வினையாற்றுகிறார்கள்.
ஆதலால், சட்டவரைவில் இருக்கும் பிரிவு 5, 6(2), 7 ஆகியவற்றை நீக்க வேண்டும். ஒரு குழந்தை திட்டத்தால் சமூக மற்றும் பொருளாதார ரீதியான விளைவுகள் ஏற்படலாம், மக்கள்தொகையிலும் எதிர்மறையான விளைவுகள் நேரலாம்.
இந்த திட்டத்தால் ஒரு சமூகத்தினர் வேண்டுமானால் பயன்பெற்றாலும் பிற சமூகத்தினர் தரப்பில் அதிகரிக்கும். சில மாநிலங்களில், சில இடங்களில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பிற சமூகத்தினர் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
அசாம், கேரளாவில் இந்துக்கள் ஒட்டுமொத்த எண்ணிக்கை மாற்று வீதம் 2.1 சதவீதமாகக் குறைந்துவிட்டது. ஆனால், அசாமில் முஸ்லிம்கள் மாற்றுவிகிதம் 3.16 ஆகவும், கேரளாவில் 2.33 ஆகவும் இருக்கிறது. இந்த மாநிலங்களில் ஒரு சமூகத்தினர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பிற சமூகத்தினர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதில் ஒரு குழந்தை திட்டம் பொருளாதார ரீதியாகவும் சரியாக வராது. ஒரு குழந்தை இருக்கும் வீடுகளில் அந்தக் குழந்தை தனது எண்ணங்களை, உணர்வுகளை வெளிக்காட்ட முடியாமல் இருக்கும். வேலை பார்க்கும் வயதுள்ள பிரிவினருக்கும், அவர்களைச் சார்ந்திருக்கும் பிரிவினருக்கும் இடையிலான சமநிலையையும் ஒரு குழந்தை திட்டம் குலைத்துவிடும்.
சீனா கூட ஒரு குழந்தை திட்டத்தை நடைமுறைப்படுத்தி அதனால் எழுந்த சிக்கலை உணர்ந்து அதைத் திரும்பப் பெற்றுவிட்டது. ஒவ்வொரு சமூகத்துக்கும் ஒரு மக்கள்தொகை கொள்கையை 2021-2030்க்குள் எடுத்துள்ளார்கள். ஆதலால், சிசு மரணம் மற்றும் மகப்பேற்றில் இறப்புவீதம் குறைப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்தும் அளிக்க வேண்டும். மக்கள் தொகை நிலைத்தன்மைக்கு முக்கியத்துவம் அளித்து, மாநிலம் தடையின்றி வளர உதவ வேண்டும்''.
இவ்வாறு அலோக் குமார் தெரிவித்துள்ளார்.