

ட்விட்டர் நிறுவனம் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கின் புளூ டிக் அடையாளம் நீக்கப்பட்டு பின்னர் சரி செய்யப்பட்டது.
மத்திய அரசு முன்பே அறிவித்த புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதற்கு ட்விட்டர் நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் புதிய விதிகளின் படி இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு இறுதி கெடு வழங்கியது.
இதனைத் தொடர்ந்து ட்விட்டர் நிறுவனம் பெற்றுள்ள சட்டபாதுகாப்பு அந்தஸ்து விலகிக் கொள்ளப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. நீண்ட இழுபறிக்கு பிறகு புதிய ஐடி விதிமுறைபடி இந்தியாவிற்கான குறை தீர்ப்பு அதிகாரியாக, வினய் பிரகாஷ் நியமிக்கப்பட்டு உள்ளதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், அவரது மின்னஞ்சல் முகவரியும் வெளியிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் ஆகியோரின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்குகளில், புளூ டிக் வசதியை நீக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதுபோலவே ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகளில் புளூ டிக் அடையாளத்தை நீக்கியது.
அதுபோலவே மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கை ஒரு மணி நேரத்திற்கு ட்விட்டர் நிறுவனம் முடக்கியது.
இந்தநிலையில் ட்விட்டர் நிறுவனம் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கின் புளூ டிக் அடையாளம் நீக்கப்பட்டது. எனினும் சிறிது நேரத்துக்கு பிறகு மீண்டும் புளூ டிக் அடையாளம் வழங்கப்பட்டது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ட்விட்டர் நிறுவனம் ‘‘ராஜீவ் சந்திரசேகரின் ட்விட்டர் கணக்கின் பெயர் மாற்றப்பட்டதால் தற்காலிகமாக புளூ டிக் நீக்கப்பட்டதாகவும், பின்னர் சரி செய்யப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளது.