ஜூலை 19 தொடங்கி ஆகஸ்ட் 13 வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு

ஜூலை 19 தொடங்கி ஆகஸ்ட் 13 வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு
Updated on
1 min read

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரானது ஜூலை 19 ஆம் தொடங்கி ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை மொத்தம் 19 நாட்கள் நடைபெறும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் போது அன்றாடம் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை இரு அவைகளும் செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

கரோனா பாதிப்பு தொடங்கிய நாள் முதல் இதுவரை மூன்று முறை நாடாளுமன்றம் கூடியுள்ளது. ஆனால், மூன்று முறையுமே மிகமிகக் குறைவான நாட்களே கூட்டத்தொடர் நடைபெற்றது.

இந்நிலையில், ஜூலை 19-ல் தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மொத்தம் 19 நாட்கள் நடைபெறக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அசாம், புதுச்சேரி உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் நடைபெறும் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், இந்த மாநிலங்களில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள கட்சியின் பிரதிநிதிகள் கரோனா பெருந்தொற்றை கையாளுதல், குறிப்பாக தடுப்பூசி திட்டம் உள்ளிட்டவை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படும்:

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மேலும் கூறும்போது, "இதுவரை, 311 உறுப்பினர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றுள்ளனர். 23 உறுப்பினர்கள் இதுவரை ஒரே ஒரு டோஸ் தடுப்பூசிகூட செலுத்திக் கொள்ளவில்லை. மழைக்கால கூட்டத்தொடர் முழுக்க முழுக்க கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றியே நடத்தப்படும். உரிய சமூக விலகலைக் கடைபிடித்தே அவையில் உறுப்பினர்கள் அமர வைக்கப்படுவர்" என்றார்.

மக்களவை உறுப்பினர்களில் 500 பேர் ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்திக் கொண்டுள்ளனர். அதேபோல், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற செயலர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in