

சிலருக்குத் தேர்தல் மட்டுமே திட்டமாக இருக்கலாம். ஆனால், எங்களுடைய திட்டம் என்பது வளர்ச்சியை நோக்கி மட்டுமே இருக்கும் என்று ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு உத்தரகாண்ட் முதல்வர் பதிலளித்துள்ளார்.
டெல்லியைத் தொடர்ந்து அண்டை மாநிலமான பஞ்சாப்பிலும் ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி வியூகம் வகுத்து வருகிறது. அங்கு தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம், ஒவ்வொரு குடும்பத்துக்கும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், முந்தைய நிலுவை மின்சாரக் கட்டணங்களில் சலுகை உள்ளிட்ட சலுகைகளை அறிவித்தார்.
அதற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலிலும் போட்டியிடத் திட்டமிட்டுள்ள அவர், ’’நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவோம். விவசாயிகள் இலவச மின்சாரம் பெறலாம். நிலுவையில் உள்ள பாக்கித்தொகை தள்ளுபடி செய்யப்படும். 24 மணி மின்சாரம் வழங்க சற்று நேரம் எடுத்துக்கொள்ளும். ஆனால் நாங்கள் அதைச் செய்வோம்’’ என்று கேஜ்ரிவால் உறுதி அளித்திருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள உத்தரகாண்ட் முதல்வரும் பாஜகவைச் சேர்ந்தவருமான புஷ்கர் சிங் தமி, ’’சிலருக்குத் தேர்தல் மட்டுமே திட்டமாக இருக்கலாம். ஆனால், எங்களுடைய திட்டம் என்பது வளர்ச்சியை நோக்கி மட்டுமே இருக்கும். முக்கியத் திட்டங்களை விரைந்து முடிப்பது, அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களைக் கட்டி முடிப்பது, மத்தியில் ஆளும் பிரதமர் மோடி அரசின் நலத்திட்டங்களை மாநில மக்களுக்கு எடுத்துச் செல்வது ஆகியவைதான்.
வளர்ச்சிப் பாதையில் மாநிலத்தை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது மட்டுமே எங்களின் முன்னால் உள்ள சவால். கடந்த 4 ஆண்டுகளில் கட்டமைப்புத் துறை உட்படப் பெரும்பாலான துறைகளில் நிறையச் செய்துவிட்டோம்.
உத்தரகாண்ட் வந்து பார்த்தால், இங்கு செய்யப்பட்டிருக்கும் பணிகளைக் காண முடியும். சாலை வசதி, டேராடூன் - டெல்லி நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
என்னுடைய சக அமைச்சர்கள் எல்லோருமே என்னைக் காட்டிலும் அனுபவம் வாய்ந்த மூத்தவர்கள். அவர்கள் யாரையும் மாற்றும் எண்ணம் எனக்கில்லை’’ என்று புஷ்கர் சிங் தமி தெரிவித்தார்.