Published : 12 Jul 2021 03:12 AM
Last Updated : 12 Jul 2021 03:12 AM

கரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில் ஜிகா வைரஸ் பரவுவதால் தவிக்கும் கேரள அரசு

திருவனந்தபுரம்

கரோனா அதிகரித்து வரும் நிலையில், கூடுதலாக ஜிகா வைரஸ் தொற்றும் பரவி வருவதால் இவற்றை கட்டுப்படுத்த முடியாமல் கேரள அரசு தவித்து வருகிறது.

நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை பெரும்பாலான மாநிலங்களில் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. ஆனால், மகாராஷ்டிரா, கேரள மாநிலங்களில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு ஜிகா வைரஸ் தொற்று இருப்பது சில நாட்களுக்கு முன்னர் கண்டறியப்பட்டது. இந்த ஜிகா வைரஸால் இதுவரை 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

ஏற்கெனவே கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தற்போது ஜிகா வைரஸ் பிரச்சினையும் சேர்ந்துள்ளதால், கேரள சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கவலை அடைந்து வருகின்றனர். இந்நிலையில், கரோனா மற்றும் ஜிகா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு நிபுணர்கள் குழு விரைவில் கேரளவுக்கு வரவுள்ளது.

ஜிகா வைரஸ் ஏடிஎஸ் என்ற கொசுக்கள் மூலம் பரவுகிறது. இந்தக் கொசு இரவு நேரத்தைவிட பகலில்தான் கடிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். காய்ச்சலின்போது ஏற்படும் அறிகுறிகளே ஏடிஎஸ் கொசு கடித்தாலும் ஏற்படும். இதற்கு இதுவரை தடுப்பூசியோ நேரடியான மருந்தோ இல்லை என்கின்றனர். எனினும், உயிரிழப்பு என்பது மிக அரிதாகவே இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே, பகலில்கொசு கடிக்காமல் பார்த்துக் கொள்வது, வீடு மற்றும் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது, கொசுவலை பயன்படுத்துவது போன்றவற்றால் இந்த ஜிகாவைரஸ் பரவலை தடுக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நாட்டில் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் கேரளாவில்தான் கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. சீனாவின் வூஹான் நகரில் உள்ள ஆய்வகத்தில் இருந்துதான் கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியதாக செய்திகள் வெளியாயின. அந்தவூஹான் நகரில் மருத்துவம் படிக்கும் 3 பேர் கேரளா திரும்பிய பிறகு அவர்களிடம் இருந்து கரோனா தொற்று பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால்,கரோனா அதிகரித்தபோது, நாட்டிலேயே மிக விரைவாக தொற்று பரவலை கட்டுப்படுத்திய மாநிலம் என்ற பெயரை கேரளா பெற்றது. ஆனால், 2-வது அலையை கேரளாவில் இன்னும் கட்டுப்படுத்த முடியவில்லை.

கேரளாவில் தினமும் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று ஏற்படுகிறது. கடந்த சனிக்கிழமை மட்டும் 14,087 பேருக்கு தொற்று ஏற்பட்டது. ஒரே நாளில் 109 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் கேரளாவில் மட்டும் இதுவரை 30 லட்சத்து 39,029 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14,380 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது ஒரு லட்சத்து 13,115 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறும்போது, ‘‘கேரள மாநிலத்தில் அண்மையில் ஊரடங்கு தளர்வுகள் சில அறிவிக்கப்பட்டன. அதன்பிறகு கரோனா பரவல் அதிகரித்து வருகிறது’’ என்றார்.

இதற்கிடையில், நாட்டில் கரோனா பரவல் 3-வது அலை வந்தால், எப்படி சமாளிப்பது என்று கேரள மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும், கடைகளை திறக்க அனுமதித்தது, மதுக் கடைகளில் குவியும் கூட்டம் போன்றவையும் கேரளாவில் கரோனா பரவல் அதிகரிப்புக்கு காரணம் என்று குற்றம் சாட்டுகின்றனர். கரோனா வைரஸ் தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகஉள்ளது. அதை மாநில அரசு மறைக்கிறது என்று கேரள எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x