Published : 12 Jul 2021 03:12 AM
Last Updated : 12 Jul 2021 03:12 AM

மதம், ஜாதி போன்ற தகவல்களை மறைத்து திருமணம் செய்வதை தடுக்க புதிய சட்டம்: அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் தகவல்

மதம், ஜாதி போன்ற முக்கிய தகவல்களை மறைத்து திருமணம் செய்வதைத் தடுக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா தெரிவித்துள்ளார்.

மதம் மாற்றுவதற்காக காதல் என்ற பெயரில் பழகி திருமணம் செய்யும் சதி நடக்கிறது. இதை தடுக்க வேண்டும் என்று பலர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதை ‘லவ் ஜிகாத்’ என்கின்றனர். இந்த விவகாரம் சில மாதங்களாகவே நாடு முழுவதும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

இதுதொடர்பான வழக்கில் பதில் அளிக்கும்படி ஒடிசா, காஷ்மீர் மாநிலங்களுக்கும் சண்டிகர் நிர்வாகத்துக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

திருமணம் செய்வதற்காக மட்டுமே மதம் மாறுவதை ஏற்க முடியாது என்று ஒரு வழக்கில் அலகாபாத் நீதிமன்றமும் தீர்ப் பளித்திருந்தது. இதையடுத்து, பாஜக ஆளும் மாநிலங்கள் சிலவற்றில் லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் கொண்டு வரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மதம், ஜாதி உள்ளிட்ட முக்கிய தகவல்களை மறைத்து ஆண்கள் திருமணம் செய்வதைத் தடுக்க புதிய சட்டம் கொண்டு வரப் போவதாக அசாம் மாநில அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா நேற்று கூறியதாவது:

தங்களது மதம், ஜாதி போன்ற தகவல்களை மறைத்து ஆண்கள் திருமணம் செய்வது தெரிய வந்துள்ளது. இதைத் தடுக்கவே இந்தச் சட்டத்தைக் கொண்டு வரவுள்ளோம். இந்தச்சட்டம் அனைவருக்கும் பொதுவானதாகும். இந்துக்கள், முஸ்லிம் கள் என அனைவருக்கும் இந்தச் சட்டம் பொருந்தும். இந்து மதத்தை சேர்ந்த பெண்ணை, அதே மதத்தை சேர்ந்தவர் ஏமாற்றி திருமணம் செய்து கொள்வதும் லவ் ஜிகாத்தான். அவர்களுக்கும் தண்டனை உண்டு. இதைத் தடுக்கவே இந்தச் சட்டத்தைக் கொண்டு வரவுள்ளோம்.

‘லவ் ஜிகாத்’ என்ற வார்த்தையை நாங்கள் விரும்பவில்லை. இது தொடர்பாக எங்கள் தேர்தல் அறிக் கையை வெளியிடும் போது நாங்கள் வாக்குறுதி அளித்திருந்தோம். தற்போது புதிய அரசு பதவியேற்று 2 மாதங்கள்தான் ஆகிறது.

முதலில் பசு பாதுகாப்புச் சட்டத்தையும், குடும்பத்துக்கு 2 குழந்தைகள் மட்டுமே என்ற சட்டத்தையும் கொண்டு வரவுள்ளோம். அதைத்தொடர்ந்து மதம் உள்ளிட்ட தகவல்களை மறைத்து திருமணம் செய்வதைத் தடுக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும். இவ்வாறு ஹிமந்தா பிஸ்வாஸ் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x