

டெல்லியில் 2013 மற்றும் 2015-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக அதிகபட்சமாக ரூ.608.21 கோடி நன்கொடை பெற்றுள்ளது.
டெல்லியில் அரசியல் கட்சிகள் அறிவித்த நன்கொடை விவரங் களை அசோசியேஷன் ஃபார் டெமாக்ரடிக் ரிஃபார்ம்ஸ், நேஷனம் எலெக்ஷன் வாட்ச் ஆகிய தன்னார்வ அமைப்புகள் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளன.
இதன்படி, பாஜக 2013-14-ல் ரூ.170.86 கோடி நன்கொடையாக பெற்றது. இது 2014-15-ல் 437.35 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டை காட்டிலும் 156 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சி 2013-14-ல் ரூ.9.42 கோடி நன்கொடை பெற்ற தாக தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தது. 2014-15-ல் இக்கட்சி பெற்ற நன்கொடை ரூ.35.28 கோடி யாக உயர்ந்துள்ளது. அதாவது முந்தைய ஆண்டை காட்டிலும் இந்த நிதி 275 சதவீதம் உயர்ந்துள்ளது.
காங்கிரஸ் கட்சி 2014-15-ல் 141.46 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இது முந்தைய நிதியாண்டை காட்டி லும் ரூ.81.88 கோடி அதிகம் ஆகும்.
சரத் பவாரின் தேசியவாத காங் கிரஸ் கட்சி இந்த 2 ஆண்டுகளில் ரூ.52.84 கோடி நன்கொடை பெற்றதாக கூறியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2013-14-ல் ரூ.1.22 கோடியும் 2014-15-ல் 1.33 கோடியும் நன்கொடை பெற்றதாக அறிவித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதே ஆண்டுகளில் ரூ.2.09 கோடி மற்றும் 3.42 கோடி நிதி பெற்றதாக கூறியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி 2014-15-ல் 20 ஆயிரத்துக்கு மேல் நன்கொடை பெறவில்லை என்று கூறியுள்ளது.
ஒட்டுமொத்தமாக, 5 தேசிய கட்சிகள் இந்த 2 ஆண்டுகளில் ரூ.870.15 கோடி நிதி பெற்றுள்ளன. அதாவது 2013-14-ல் ரூ. 247.77 கோடி யும் 2014-15-ல் 622.38 கோடியும் இவை நன்கொடை பெற்றுள்ளன.
டெல்லியில் 2013 டிசம்பரிலும் 2015 பிப்ரவரியிலும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.