Published : 11 Jul 2021 04:51 PM
Last Updated : 11 Jul 2021 04:51 PM

பணிந்தது ட்விட்டர்; குறை தீர்ப்பு அதிகாரி நியமனம்

ட்விட்டர் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு குறை தீர்ப்பு அதிகாரியாக வினய் பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய அரசு புதிய தகவல் தொழில்நுட்பச் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. இந்தப் புதிய சட்டத்தின் விதிமுறைகளுக்கு ட்விட்டர் நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், புதிய விதிகளின்படி இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு இறுதி கெடு வழங்கியது. அதற்கு ட்விட்டர் பதிலளிக்காததை அடுத்து, ட்விட்டர் நிறுவனம் பெற்றுள்ள சட்டப் பாதுகாப்பு அந்தஸ்து விலக்கிக் கொள்ளப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.

பலகட்ட சர்ச்சைகளுக்குப் பிறகு, மத்திய அரசின் புதிய விதிகளுக்கு இணங்கி ட்விட்டர் நிறுவனம், தர்மேந்திர சாதுர் என்பவரை இந்திய அளவிலான குறைதீர்ப்பு அதிகாரியை நியமித்தது. ஆனால், நியமனம் செய்யப்பட்ட சில நாட்களிலேயே திடீரென அவர் ராஜினாமா செய்தார்.

அதைத் தொடர்ந்து ட்விட்டர் நிறுவனம், தனது சர்வதேச சட்டக் கொள்கை இயக்குநரும் அமெரிக்காவைச் சேர்ந்தவருமான ஜெர்மி கெசல் என்பவரை இந்தியக் குறைதீர்ப்பு அதிகாரியாக தற்காலிகமாக நியமித்தது. இந்திய விதிகளின்படி இந்தியக் குடிமகனே இந்தப் பொறுப்பை வகிக்க முடியும் என்பதால், அந்த நியமனம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இதற்கிடையில், ட்விட்டர் நிறுவனம் மீது இந்தியாவைச் சேர்ந்த பயனாளர் ஒருவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் ''முழு நேரக் குறைதீர்ப்பு அதிகாரியை நியமிக்க எங்களுக்கு 8 வாரங்கள் தேவை. குறைதீர்ப்பு குறித்த முதல்கட்ட அறிக்கையை ஜூலை 11-ம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளோம்'' என்று தெரிவித்தது.

இந்நிலையில், புதிய ஐடி விதிமுறைபடி இந்தியாவிற்கான குறை தீர்ப்பு அதிகாரியாக, வினய் பிரகாஷ் நியமிக்கப்பட்டு உள்ளதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், அவரது மின்னஞ்சல் முகவரியும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அதிகாரி புகாரை 24 மணி நேரத்துக்குள் ஏற்றுக்கொண்டு, அந்த புகார் மீது அடுத்த 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். புகாரைப் பெற்றுக்கொண்டது தொடர்பாக புகார்தாரருக்கு ஒப்புகையும் வழங்கிட வேண்டும்.

முன்னதாக ஐடி விதிகளை பின்பற்றுவது தொடர்பாக ஜூலை 11-ம் தேதி அறிக்கை அளிப்பதாக ட்விட்டர் நிறுவனம் உறுதி அளித்தது. இதையடுத்து அதற்கான ரிப்போர்ட்டை டெல்லி உயர்நீதிமன்றத்தில் அந்த நிறுவனம் தாக்கல் செய்தது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x