ரவிசங்கர் பிரசாத், ஜவடேகருக்கு விரைவில் பாஜகவில் முக்கியப் பதவி

முன்னாள் மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர்பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் | கோப்புப்படம்
முன்னாள் மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர்பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் | கோப்புப்படம்
Updated on
1 min read

முன்னாள் மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் இருவருக்கும் பாஜகவில் அமைப்பு ரீதியாக உயர்ந்த பதவிகள் வழங்கப்படலாம் என்ற பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த வாரம் மாற்றி அமைக்கப்பட்டது. ஏற்கெனவே அமைச்சர்களாக இருந்த 12 பேர் பதவியை ராஜினாமா செய்தனர், 43 அமைச்சர்கள் புதிதாகப் பொறுப்பேற்றனர்.

12 அமைச்சர்கள் ராஜினாமா செய்ததில் மூத்த தலைவர்கள் ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் இருவரும் அடங்குவர்.

இந்த இரு தலைவர்களுக்கும் விரைவில் பாஜகவில் உயர்ந்த பதவிகள் வழங்கப்படலாம். அதாவது தேசியப் பொதுச்செயலாளர் அல்லது துணைத் தலைவர் பதவி வழங்கப்படலாம் என்று பாஜகவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேச சட்டப்பேரத் தேர்தல், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடக்க உள்ளன.

தேர்தல் நடக்கும் மாநிலங்களின் பொறுப்பாளர்களாகவும் கூடுதலாக இருவருக்கும் பொறுப்புகள் வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. இதற்கான அறிவிப்பை பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா விரைவில் அறிவிப்பார் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, பாஜகவின் தேசியச் செயலாளர்களுடன் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா இன்று மாலை தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார். அந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் திட்டமிடல், பதவி மாற்றம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in