

பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கண்டித்து, நாடுமுழுவதும் அடுத்தவாரம் பிரச்சாரம் செய்ய காங்கிரஸ் கட்சித் திட்டமிட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவருவதாகக் கூறி, எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றன. நாட்டின் பெரும்பாலான நகரங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்துவிட்டது. டீசல் விலையும் ஏறுமுகத்தில் இருக்கிறது
எரிபொருள் விலை உயர்வால், சரக்குக் கட்டணம் உயர்ந்து, உணவுப்பொருட்கள் விலையும் அதிகரித்து வருகிறது. மக்கள் வீடுகளில் குடும்பம் நடத்துவதற்கான செலவு அதிகரித்து வருகிறது. இதையடுத்து, பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி நாடுமுழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்த உள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறுகையில் “ காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் டெல்லியில் அடுத்தவாரம் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்திவைத்து பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து பிரச்சாரத்தை தொடங்கி வைக்கிறார். அதன்பின் பல்வேறு மெட்ரோ நகரங்களில் பல்வேறு தலைவர்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்த உள்ளனர்.
மும்பையில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கொல்கத்தாவில் கவுரவ் கோகே, சென்னையில் சசி தரூரும் பேட்டி அளிக்கின்றனர். ஜெய்பூரில் ஆனந்த் சர்மா, அகமதாபாத்தில் மணிஷ் திவாரி, ஹைதராபாத்தில் தீபிந்தர் ஹூடா, டேராடூனில் சச்சின் பைலட், லக்னோவில் கமல்நாத் ஆகியோர் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துகிறார்கள்.
வரும் 19-ம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இந்தக் கூட்டத்தில் என்ன மாதிரியான பிரச்சினைகளை எழுப்பலாம், எந்த விஷயங்கள் குறித்து விவாதத்தை கிளப்பலாம் உள்ளிட்டவை குறித்து காங்கிரஸ் கட்சி இன்னும் ஏதும் ஆலோசனை நடத்தவில்லை.நாட்டின் பொருளாதார பிரச்சினையை காங்கிரஸ் கட்சி முக்கியமாக எழுப்பி விவாதி்க்க வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்தனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக பால் விலையும் உயர்த்தப்பட்டு வருகிறது. அமுல் மற்றும் மதர் டெய்ரி பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசலுக்கு பன்முக வரிவிதிப்பினால்தான் தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசலையும் ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவந்தால்தான் நுகர்வோருக்கு நிவாரணம் கிடைக்கும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.