

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தலைவர் சயத் சலாஹுதீனின் இரு மகன்களான சயத் அகமது ஷகீல் மற்றும் ஷாகித் யூசுப் உள்ளிட்ட 11 பேர் அரசுப்பணியிலிருந்து நீக்கி ஜம்மு காஷ்மீர் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த 11 பேரும் தேசவிரோத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்ஐஏ விசாரணையில் சயத் அகமது ஷகீல் மற்றும் ஷாகித் யூசுப் இருவரும் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்புக்காக பணம் பெற்றது, பணம் வசூலித்தல், ஹவாலாப் பணப்பரிமாற்றம் ஆகியவற்றில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.
இதில், ஒருவர் காஷ்மீரில் உள்ள ஷெர் ஐ காஷ்மீர் மருத்துவக் கல்லூரியிலும், மற்றொருவர் திறன் மேம்பாட்டுத் துறையிலும் பணியாற்றிவருகின்றனர்.
தேசவிரோத செயல்களில் ஈடுபடும் அரசு ஊழியர்களைக் கண்டுபிடிக்கவும், விசாரிக்கவும் சிறப்பு படைப் பிரிவை கடந்த ஏப்ரல் 21-ம் தேதி ஜம்மு காஷ்மீர் அரசு உருவாக்கியது.
இந்த சிறப்பு விசாரணைக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், இந்த 11 அதிகாரிகளும் தங்களின் அரசுப் பணியிலிருந்து நீக்கப்பட்டனர்.
இதில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் இரு மகன்கள் தவிர்த்து, காவலர் ரஷீத் ஷிகான் என்பவரும் தீவிரவாதச் செயலுக்கு உதவியதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காவலர் ரஷீத்தும் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜம்மு காஷ்மீர் அரசு, அரசியலமைப்புப் பிரிவு 311(2)(சி) ஆகியவற்ரை உருவாக்கியது. இந்தச் சட்டப்பிரிவின் கீழ் தேசவிரோத செயல்களில் ஈடுபடும் அரசு ஊழியர்களை விசாரணையின்றி பணியிலிருந்துநீக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. அந்தச் சட்டத்தின் கீழ் 11 ஊழியர்களும் நீக்கப்பட்டனர்.
இவர்கள் 3 பேர் தவிர, ஆனந்த்காக் மாவட்டத்தில் 4 ஊழியர்கள், பாரமுல்லா மாவட்டத்தில் ஒருவர், ஸ்ரீநகர், புல்வாமா, குப்வாரா மாவட்டத்தில் ஒருவர் என மொத்தம் 11 அரசு ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்த 11 ேபரில் 4 ஊழியர்கள் கல்வித்துறையிலும், இருவர் போலீஸார், ஒருவர் வேளாண்துறை, திறன்மேம்பாடு, மின்துறை, சுகாதாரத்துறை ஆகியவற்றில் தலா ஒருவர் நீக்கப்பட்டனர்.
இதற்கிடையே ஜம்மு காஷ்மீர் அரசு உருவாக்கிய சிறப்பு விசாரணைக் குழுவை பல்வேறு எதிர்க்கட்சிகள் கண்டித்துள்ளன. ஜம்மு காஷ்மீர் அரசு உருவாக்கிய சிறப்பு விசாரணைக் குழு தன்னிச்சையானது, கொடூரமானது என தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி, மக்கள் மாநாட்டுக் கட்சி, ஜம்மு காஷ்மீர் அப்னி கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டித்துள்ளன.
முன்னதாக, ஒரு துணைப் பேராசிரியர், ஒரு ஆசிரியர் உள்ளிட்ட 3 பேர் பணியிலிருந்து நீக்கப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தேசவிரோத செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது.