

கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயலில் (கேஜிஎஃப்) 90 சதவீதத்துக்கும் அதிகமாக தமிழர் கள் வாழ்வதால் குட்டி தமிழ் நாடாகவே காட்சியளிக்கிறது.
இந்நிலையில், கன்னட சலுவளி வாட்டாள் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் கடந்த மாதம், கோலார் தங்கவயலில் உள்ள தமிழ்ப் பெயர்ப் பலகைகளை அகற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோலார் மாவட்ட மற்றும் தங்கவயல் நகராட்சி நிர்வாகங்களுக்கு கடிதம் எழுதினார்.
இதற்கு மாவட்ட நிர்வாகம் மறுப்பு தெரிவித்த நிலையில், வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட சலுவளி, கன்னட அமைப்பைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வாட்டாள் நாகராஜ் கூறியபடி, கன்னட அமைப்பினர், ‘தேசியக்கவி டாக்டர் குவெம்பு பேருந்து நிலையம்' என தமிழில் எழுதப்பட்டிருந்ததன் மேல் கருப்பு மை பூசி அழித்தனர்.
இதற்கு, தலித் ரக்ஷன வேதிகே அமைப்பின் தலைவர் கலை அன்பரசன் தலைமையில் திரண்ட தமிழ் அமைப்பினர் கன்னட அமைப்பினருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.