Published : 11 Jul 2021 03:13 AM
Last Updated : 11 Jul 2021 03:13 AM

பிரதமர் மோடி தலைமையில் 14-ம் தேதி அமைச்சரவைக் கூட்டம்

புதுடெல்லி

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் வரும் புதன்கிழமை (ஜூலை 14) நடைபெற உள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று, பிரதமராக நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பதவியேற்றார். அதன் பிறகு அவரது தலைமையிலான அமைச்சரவை முதல்முறையாக கடந்த புதன்கிழமை விரிவாக்கம் செய்யப் பட்டது. இதில் புதிதாக 15 கேபினட் அமைச்சர்களும் 28 இணை அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

இதையடுத்து மறுநாள் மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. அமைச்சரவை விரிவாக்கத்துக்குப் பிறகு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும் இந்தக் கூட்டத்தில் வேலைவாய்ப்பு, விவசாயம், கரோனா வைரஸை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்து, முடிவுகள் எடுக் கப்பட்டன.

கரோனா தடுப்பு பணிக்காக அவசர கால நிதியாக மத்திய அரசு ரூ.23,123 கோடி ஒதுக்கியது. கரோனா மூன்றாவது அலை குழந்தைகளை தாக்காமலிருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் வரும் புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. அமைச்சரவை விரிவாக்கத்துக்குப் பிறகு நடைபெறும் இரண்டாவது கூட்டம் இதுவாகும்.

கரோனா வைரஸ் பரவல் நாட்டின் அனைத்து துறைகளையும் பாதித்துள்ள நிலையில், அதனை எதிர்கொள்வது தொடர்பாக ஒவ்வொரு அமைச்சரிடம் ஒரு சுருக்கமான திட்டத்தை பிரதமர் முன்வைப்பார் எனத் தெரிகிறது. மேலும் நாட்டின் வளர்ச்சி தொடர்பான பிற விஷயங்களும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x