

பஞ்சாபில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் பாஜக, அங்கு மொத்தம் உள்ள 117 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் கூறினார்.
பாஜக தேசிய பொதுச் செயலாளர் (அமைப்பு) பி.எல்.சந்தோஷ் நேற்று சண்டிகரில் கட்சியின் பஞ்சாப் பிரிவு கூட்டத்தில் பங்கேற்றார். கட்சியின் மாநிலத் தலைவர்கள் மற்றும் பிறருடன் அவர் ஆலோசனை நடத்தினார். பஞ்சாப் அரசியல் குறித்து விரிவான கலந்துரையாடலும் மேற்கொண்டார்.
பின்னர் அவர் தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது:
உலகின் மிகப்பெரிய அரசியல்கட்சியாக பாஜக திகழ்கிறது. பிரதமர் நரேந்திர மோடியை அதிகாரத்தில் இருந்து அகற்ற நாட்டின் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் எல்லா தந்திரங்களையும் கையாளுகின்றன. புதிய வேளாண் சட்டங்கள் செழிப்பை கொடுக்கும் என விவசாயிகள் உணர்ந்துள்ளதால் அந்த சட்டங்களுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் பொய் பிரச்சாரம் விரைவில் சரிவடையும். பிரதமர் மோடி எப்போதும் விவசாயிகளுக்கு ஆதரவானவர். விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக்க மோடி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
நாட்டில் பாஜகவுக்கு சாதகமான அலை உள்ளது. பஞ்சாப் மக்களும் தங்கள் மாநிலத்தில் பாஜக அரசை விரும்புகின்றனர். மத்திய அரசின் கொள்கைகளை மக்களிடத்தில் தொண்டர்கள் கொண்டு செல்ல வேண்டும்.
பஞ்சாபில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் பாஜக, அங்கு மொத்தம் உள்ள 117 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும். இதில் மக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக் கும். இவ்வாறு பி.எல்.சந்தோஷ் கூறினார்.