முடிவுக்கு வருகிறதா பஞ்சாப் அரசியல் சர்ச்சை? சித்து சூசக ட்வீட்

முடிவுக்கு வருகிறதா பஞ்சாப் அரசியல் சர்ச்சை? சித்து சூசக ட்வீட்
Updated on
1 min read

இதுவரை பஞ்சாப் மாநில முதல்வரை கடுமையாக விமர்சித்துவந்த நவ்ஜோத் சிங் சித்து இப்போது பஞ்சாப் காங்கிரஸ் உட்கட்சிப் பூசலுக்கு முடிவு வந்துவிட்டதுபோல் அரசுக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் அம்மாநில காங்கிரஸில் உட்கட்சிப் பூசல் வலுத்துள்ளது.

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்குக்கு எதிராக முன்னாள் கிரிக்கெட் வீரரும் முன்னாள் அமைச்சருமான நவ்ஜோத் சிங் போர்க்கொடி துாக்கியுள்ளார். சித்துவுக்கு ஆதரவாக சில காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்கள் சிலர் செயல்பட்டு வருகின்றனர்.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பஞ்சாப் காங்கிரஸில் நிலவும் உள்கட்சி மோதலைத் தீர்ப்பதற்காக மூன்று பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில் சித்து டெல்லிக்குச் சென்று ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை சந்தித்தார்.

இதன் நீட்சியாக இன்று அவர் பதிவு செய்துள்ள ட்வீட் அமரீந்தர் சிங்குடன் சமாதான மனநிலைக்கு அவர் வந்துவிட்டதாகவே தெரிகிறது.

சித்து பதிவு செய்துள்ள ட்வீட்டில், "இன்று பல சக்திகள் இணைந்து பஞ்சாபை வீழ்த்த நினைக்கின்றன. டெல்லி அரசு நம் மாநிலத்திலுள்ள அனல் மின் நிலையங்கள் மூடப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன" என்று பதிவிட்டுள்ளார்.

இதன்மூலம், சித்து சமாதான முயற்சியில் ஈடுபடுவதாக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றன.

சித்து கடந்த 8 மாதங்களாக மின்கட்டணம் செலுத்தாமல் இருந்து வருவதும், 8.67 லட்சம் ரூபாய் கட்டண பாக்கி வைத்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.

கடந்த ஆண்டு 17 லட்ச ரூபாயை மின்கட்டண பாக்கியாக சித்து வைத்திருந்ததாகவும் பின்னர் கடந்த மார்ச்சில் 10 லட்ச ரூபாயையும் செலுத்தியிருப்பதாகவும், தற்போது மேலும் 8.67 லட்சம் அளவுக்கு சித்து மின்கட்டண பாக்கி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், மின்துறை பற்றிய அவரின் அக்கறைப் பதிவு பல ஊகக்களுக்கு வழி வகுத்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in