

கர்ப்பிணிகள் தங்களின் பாதுகாப்புக்கும், குழந்தைக்காகவும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். கரோனா வைரஸ் தொற்றால் தீவிரமான பாதிப்புகள் ஏற்படும், குறைப் பிரசவம் ஏற்படலாம் என்று நிதி ஆயோக் சுகாதார உறுப்பினர் வி.கே.பால் அறிவுறுத்தியுள்ளார்.
நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால், சுகாதாரத்துறை இணைச் செயலர் லாவ் அகர்வால் இருவரும் நேற்று கூட்டாக நிருபர்களுக்குப் பேட்டி அளித்தனர்.
அப்போது வி.கே.பால் கூறியதாவது:
''கர்ப்பிணிப் பெண்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இந்தத் தடுப்பூசி அவர்களின் பாதுகாப்புக்கு மட்டுமல்லாது, குழந்தையின் பாதுகாப்புக்கும் சேர்த்துதான். ஒருவேளை கரோனா தடுப்பூசி செலுத்தாமல் வைரஸால் பாதிக்கப்பட்டால், கருவில் உள்ள சிசுவின் உடல் நிலை பாதிக்கப்படலாம், குறைப் பிரசவம் கூட ஏற்படலாம்.
அதுமட்டுமல்லாமல் கர்ப்பிணிகள் தடுப்பூசி செலுத்தாமல் கரோனாவால் பாதிக்கப்பட்டால் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கும் செல்ல வாய்ப்பு உண்டு. இவ்வாறு நடக்கும்போது, அது பிறக்கும் குழந்தைக்கு ஆபத்தாக முடியும்.
ஆதலால், கர்ப்பிணிகள் கண்டிப்பாக கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். அது மிக முக்கியமானது. அதற்கான வழிகாட்டல்களை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கரோனா 2-வது அலை ஓயவில்லை. கரோனாவுக்கு எதிரான போரும் முடியவில்லை. இன்னும் நாட்டின் சில பகுதிகளில் வைரஸ் தீவிரமாக இருப்பதால், அச்சுறுத்தல் இருக்கிறது. நாம் கவனக்குறைவாக இருந்தால், சூழல் எப்போது வேண்டுமானால் வெடிக்கும் என்பதற்கான எச்சரிக்கைதான்.
தொடர்ந்து 3 வாரங்களுக்கு தினசரி 10 ஆயிரம் பேருக்குக் குறைவாக பாதிக்கப்படும்வரை நாம் பாதுகாப்பாக இல்லை. நடப்பு சூழலைப் பார்க்கும்போது, நாம் கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றாவிட்டால், கரோனா வைரஸ் எப்போது வேண்டுமானாலும் வீரியம் பெற்று பரவக்கூடும்''.
இவ்வாறு வி.கே.பால் தெரிவித்தார்.