

நீதிபதிகள் பேரரசர்கள் போல் நடந்துகொள்ளக் கூடாது. தேவையின்றி அரசு அதிகாரிகள் உடனடியாக ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மருத்துவ அதிகாரி ஒருவருக்கு ஊதியத்தைத் திரும்ப வழங்க அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தவில்லை என்பதால், சுகாதாரத்துறைச் செயலர், தலைமை மருத்துவ அதிகாரியை நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உத்தரப் பிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.
இந்த வழக்கு விசாரிக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், ஹேமந்த் குப்தா அமர்வு நேற்று தீர்ப்பளித்தது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
''இந்த நாட்டில் உள்ள உயர் நீதிமன்றத்தில், அரசு அதிகாரிகளை நேரில் அழைப்பதை வழக்கமாக்கியுள்ளார்கள். ஆனால், பல முக்கியமான பணிகளை அதிகாரிகள் கவனித்து வரும்போது, அவர்கள் நேரில் ஆஜராகும்போது அந்தப் பணிகள் பாதிக்கும், இது பொதுநலனுக்கு எதிரானது.
நீதிபதிகள் தங்களின் வரையறையைத் தெரிந்துகொள்ள வேண்டும். நீதிபதிகள் அடக்கமாகவும், பணிவாகவும் நடக்க வேண்டும். பேரரசர்கள்போல் நடக்கக் கூடாது. சட்டப்பேரவை, அரசு நிர்வாகம், நீதிமன்றம் அனைத்துக்கும் தனித்தனி செயல்முறை இருக்கிறது.
இந்த மூன்று அமைப்புகளையும் ஒரு அமைப்பு மற்றொன்றை ஆதிக்கம் செய்வது முறையல்ல. அரசியலமைப்புச் சட்டத்தில் சமநிலையைப் பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால் விளைவுகள் இருக்கும். இது தொடர்பாக 2008-ம் ஆண்டு ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. அவசியமின்றி அரசு அதிகாரிகளை நேரில் நீதிமன்றத்தில் ஆஜராகக் கோரி சம்மன் அனுப்பாதீர்கள். அதிகாரிகள் அரசின் உறுப்பாக இருந்து பணிகளைக் கவனித்து வருகிறார்கள்.
அதிகாரிகள் நீதிமன்றத்துக்கு வர உத்தரவிட்டால் அவர்கள் நீண்ட தொலைவு பயணிக்க வேண்டும். நீதிமன்றத்தில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டும். இதனால் அலுவல் பணிகள் தாமதப்பட்டு, அதிகாரிக்குக் கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.
அதிகாரிகளை சம்மன் அனுப்பி அழைப்பது பொதுநலனுக்கு எதிரானது. நீதிமன்றத்தில் நீதிபதிக்கு பேனாவின் சக்தி இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட விவகாரத்தில் சர்ச்சை எழும்போது, மாநில அரசு சார்பில் ஆஜராகும் வழக்கறிஞரால் பதில் அளிக்க முடியாவிட்டால், அதற்கு பதில் அளிக்க மாநிலத்துக்கோ, சம்பந்தப்பட்ட அதிகாரிக்கோ உத்தரவிடலாம்.
ஒரு அரசு அதிகாரியை நீதிமன்றத்துக்கு அழைப்பதால் நீதிமன்றத்தின் மரியாதையும், கம்பீரமும் மேம்படாது. நீதிமன்றத்தின் கவுரவம் என்பது உத்தரவிடுவதுதான், கோருவது அல்ல. அரசு அதிகாரிகளை அழைப்பதால் மேம்படாது''.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.