கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி; ஆகஸ்ட் முதல் வாரத்தில் உலக சுகாதார நிறுவனம் முடிவு?

கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி; ஆகஸ்ட் முதல் வாரத்தில் உலக சுகாதார நிறுவனம் முடிவு?
Updated on
1 min read

கோவாக்சின் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்குவது குறித்த ஆகஸ்ட் முதல் வாரத்தில் உலக சுகாதார நிறுவனம் முடிவெடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

கரோனாவுக்கு எதிராக இந்தியாவில் உள்நாட்டுத் தயாரிப்புகளான பாரத் பயோடெக்கின் கோவாக்சின், சீரம் நிறுவனத்தில் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பூசியும் வழங்கப்பட்டு வருகிறது.

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால், வெளிநாடு செல்வோர் தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றை வைத்துக் கொள்வது அவசியமாகியிருக்கிறது.

இந்நிலையில், இந்தியாவின் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட இந்தியர்கள் உள்ளிட்டோர் தங்கள் நாட்டுக்கு பயணம் செய்யும்பட்சத்தில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் நாடுகள் தெரிவித்தன.

ஐரோப்பிய ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வோருக்கு மட்டுமே கட்டுப்பாடுகளற்ற அனுமதி என்றும் தெரிவித்தன.

இது, கோவாக்சின், கோவிஷீல்டு மட்டுமே பயன்பாட்டில் உள்ள இந்தியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், தொழில் வர்த்தகர்கள் எனப் பலதரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கோவிஷீல்டு தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவாக்சினுக்கு அந்த அனுமதி வழங்கப்படவில்லை.

அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் எப்.டி.ஏ அமெரிக்காவில் கோவாக்சின் தடுப்பூசியின் அவசர பயன்பாட்டு அனுமதியை தர மறுத்துவிட்டது. கூடுதல் தரவுகளை அனுப்புமாறு கூறி விட்டது.

இதனைத் தொடர்ந்து உலக சுகாதார அமைப்பின் அவசர கால பயன்பாட்டு பட்டியலில் கோவாக்சின் இடம்பெறுவதற்காக பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்தது. எனினும் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.

இந்தநிலையில் கோவாக்சின் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்குவது குறித்த ஆகஸ்ட் முதல் வாரத்தில் உலக சுகாதார நிறுவனம் முடிவெடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானியான சவுமியா சுவாமிநாதன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த அங்கீகாரம் கிடைத்தால், கோவாக்சின் தடுப்பூசி செலுத்தியவர்கள் பிற நாடுகளுக்கு செல்ல முடியும், மீண்டும் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய தேவையில்லாமல் போகக்கூடும் எனக் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in