கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்

14 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு; உஷார் நிலை: அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல்

Published on

கேரளாவில் மொத்தம் 14 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை குறைந்து வரும் வேளையில் கேரளாவில் மட்டும் அதிகரித்து வருகிறது. அம்மாநிலத்தில் கடந்த 10 நாட்களில் 1.01 லட்சம் நோயாளிகள் குணமடைந்துள்ள நிலையில் 1.23 லட்சம் பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்தியாவில் தினசரி கரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை 42,766 ஆக உள்ளநிலையில் அதில் முதலிடத்தில் கேரளா உள்ளது. அங்கு 13,563 பேர் ஒரே நாளில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இன்றும் , நாளையும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

கேரளாவில் கரோனா வைரஸ் 2-வது அலையின் பாதிப்பே இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதற்குள் ஜிகா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அம்மாநிலத்தில் கடந்த மாதம் சிகிசைக்கு வந்த 24வயதான கர்ப்பிணி பெண்ணுக்கு காய்ச்சல், தலைவலி, தோலில் தடிப்புகள் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, அவருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டு கொசுக்கள் மூலம் பரவும் ஜிகா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 13 பேரின் மாதிரிகள் புனேயில் உள்ள தேசிய வைரலாஜி ஆய்வக நிறுவனத்துக்கு பரிசோதனைக்காக கேரள அரசு அனுப்பி வைத்துள்ளது

இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியதாவது:

கேரளாவில் மொத்தம் 14 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து சுகாதார அமைச்சகம் உஷார் படுத்தப்பட்டு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கரோனா வைரஸ் பாதிப்பை பொறுத்தவரை எண்ணிக்கை சற்று அதிகரித்து இருந்தாலும் நிலைமை கட்டுக்குள் உள்ளது.

கேரளாவின் மருத்துவ கட்டமைப்பு எதிர்கொள்ளும் அளவிலேயே கரோனா பாதிப்பு உள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் மரணிக்கும் சூழல் ஏதும் கேரளாவில் இல்லை. போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால் பயப்பட வேண்டிய அவசியமில்லை. அதேசமயம் கரோனா பரவல் கட்டுக்குள் வர மக்கள் கட்டுப்பாடுகளை கடை பிடிப்பது மிகவும் அவசியம். கண்காணிக்கும் பணிகளை அரசு தொடர்ந்து தீவிரப்படுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in