மத்திய அமைச்சரவையில் 42% அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குகள்; 90 சதவீதம் கோடீஸ்வரர்கள்: 12-ம் வகுப்புக்குள்ளாக படித்தவர்கள் 12 பேர்

புதிதாகப் பதவி ஏற்ற அமைச்சர்கள் | படம் உதவி: ட்விட்டர்.
புதிதாகப் பதவி ஏற்ற அமைச்சர்கள் | படம் உதவி: ட்விட்டர்.
Updated on
2 min read

பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் உள்ள 78 அமைச்சர்களை ஆய்வு செய்ததில் 42 சதவீத அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன, 90 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என்று ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு (ஏடிஆர்) தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி தலைைமயிலான அரசு 2019-ம் ஆண்டு பதவி ஏற்றபின் அமைச்சரவை மாற்றப்படாமல் இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில் 15 கேபினட் அமைச்சர்கள், 28 அமைச்சர்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டனர்.

ஒட்டுமொத்தமாக 78 அமைச்சர்கள் குறித்து ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''கிரிமினல் வழக்குகள்

மத்திய அமைச்சரவையில் உள்ள 78 அமைச்சர்கள் தங்கள் தேர்தல் நேரத்தில் அளித்துள்ள பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் 78 அமைச்சர்களில் 42 சதவீதம் பேர் மீது அதாவது 33 அமைச்சர்கள் மீது அறிவிக்கப்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன.

31 சதவீத அமைச்சர்கள் அதாவது 24 அமைச்சர்கள் மீது தீவிரமான கிரிமினல் வழக்குகளான கொலை மற்றும் கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மேற்கு வங்கத்தின் கூச் பெஹர் தொகுதியைச் சேர்ந்த எம்.பி.யும், உள்துறை இணை அமைச்சராக இருக்கும் நிஷித் பிரமாணிக் மீது ஐசிபி 302 பிரிவின் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. இவர்தான் அமைச்சரவையில் 35 வயதான இளம் அமைச்சர்.

சமூக ஒற்றுமையைக் குலைத்த வழக்கு 5 அமைச்சர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை முயற்சி வழக்கு (ஐபிசி பிரிவு 307) ஜான் பர்லா, பிரமானிக், பங்கஜ் சவுத்ரி, வி.முரளிதரன் ஆகியோர் மீது நிலுவையில் இருக்கிறது.

90% கோடீஸ்வரர்கள்

78 அமைச்சர்களின் சொத்து விவரங்களை ஆய்வு செய்ததில் 90 சதவீதம் பேர் அதாவது 70 அமைச்சர்கள் கோடீஸ்வரர்கள். ரூ.50 கோடிக்கும் அதிகமான சொத்துகள் அமைச்சர்கள் ஜோதிர் ஆதித்யா சிந்தியா, கோயல்பியூஷ் வேத்பிரகாஷ், நாராயண் தாது ராணே, ராஜீவ் சந்திரசேகர் ஆகியோருக்கு உள்ளது.

8 அமைச்சர்களுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவாகவே சொத்துகள் உள்ளன. 16 அமைச்சர்களுக்கு ரூ.1 கோடிக்கும் மேலாகக் கடனும், இந்த 16 பேரில் 3 அமைச்சர்களுக்கு அறிவிக்கப்பட்ட வகையில் ரூ.10 கோடிக்குக் கடனும் உள்ளன.

கல்வி விவரம்

மத்திய அமைச்சர்களில் 12 அமைச்சர்கள் 12-ம் வகுப்புக்குள்ளாகவே படித்தவர்கள். 8-ம் வகுப்புவரை படித்தவர்கள் 2 பேர் (நிஷித் பிரம்னிக், ஜான்பர்லா), 10-ம் வகுப்புவரை படித்தவர்கள் 3 பேர் (நாராயண் ராணே, ராமேஸ்வர் தெலி, பிஸ்வேஸ்வர் துடு), 12்-ம் வகுப்புவரை படித்தவர்கள் 5 பேர் (அமித் ஷா, அர்ஜூன் முன்டா, பங்கஜ் சவுத்ரி, ரேணுகா சிங் சருவுதா, சாத்வி நிரஞ்சன் ஜோதி).

பட்டதாரிகள் 17 பேர், தொழிற்முறைப் படிப்பு முடித்தவர்கள் 17 பேர், முதுகலைப் படிப்பு முடித்தவர்கள் 21 பேர், முனைவர் பட்டம் பெற்றவர்கள் 9 பேர், டிப்ளமோ முடித்தவர்கள் 2 பேர்''.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in