டெல்லியில் பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் இன்று சந்திப்பு

டெல்லியில் பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் இன்று சந்திப்பு
Updated on
1 min read

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று மாலை சந்தித்துப் பேசுகிறார். தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக பிரதமரை ஆளுநர் சந்திக்க உள்ளார்.

தமிழக அரசின் சார்பில் மாதந்தோறும் சட்டம்-ஒழுங்கு உள்ளிட்டபல்வேறு நிகழ்வுகள் குறித்த அறிக்கை ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்படும். இந்த அறிக்கைகள் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநரால் அளிக்கப்படும். மேலும், அவ்வப்போது குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர்ஆகியோரை ஆளுநர் சந்தித்து மாநில நிலவரங்கள் குறித்து ஆலோசனை நடத்துவது வழக்கம்.

தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் முடிவடைந்து, புதிதாக திமுக அரசு பொறுப்பேற்றுள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட சட்டப்பேரவையின் முதல் கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில் ஆளுநர்பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். ஆளுநர் உரையில் பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசின் நடவடிக்கை குறித்து வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்றிரவு டெல்லி புறப்பட்டு சென்றார். பிரதமர் நரேந்திர மோடியை இன்றுமாலை 4 மணிக்கு சந்தித்துப் பேசுகிறார். இந்த சந்திப்பின்போது, தமிழகத்தில் நிலவும் கரோனா பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள், சட்டம்-ஒழுங்கு நிலைமை, புதிய அரசின் செயல்பாடுகள், அரசியல் நிலவரம் குறித்து ஆலோசிக்கிறார்.

மேலும், 7 பேர் விடுதலையில் தமிழக அரசின் நடவடிக்கை, நீட் தேர்வு விவகாரம் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், பிரதமரை தமிழக ஆளுநர் சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in