

உத்தர பிரதேசத்தில் பஞ்சாயத்து தேர்தல் கடந்த ஏப்ரல் 15-ல்துவங்கி 4 கட்டங்களாக நடந்து முடிந்தது. இதையடுத்து அதன்கிராமப் பஞ்சாயத்து தலைவர்கள் தேர்தல் நடைபெற்று வரு கிறது. இதில் லக்கிம்புர் கேரியின் பாஸ்க்வான் கிராமத்தில் மனு தாக்கல் செய்ய சமாஜ்வாதி ஆதரவு பெற்ற பெண் வேட்பாளர் ரித்து சிங் நேற்று முன்தினம் வந்திருந்தார். அவரை முன்மொழியும் மற்றொரு பெண்ணான அனிதா தேவியும் உடன் இருந்தார்.
அப்போது அங்கு பாஜகவின் மக்களவை எம்.பியான ரேகா வர்மா தனது கட்சியினருடன் இருந்துள்ளார். இதில் பாஜகவினர் ரித்து சிங்கை மனு தாக்கல் செய்யவிடாமல் ஆவணங்களை பிடுங்கியதாகப் புகார் எழுந்தது. இதில் ரித்து சிங்கின் சேலையும் பாஜகவினரால் பிடித்து இழுக்கப் பட்டுள்ளது. ரித்துவின் சேலை கிழிந்ததும் வீடியோவில் பதி வாகி சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், முதல்வர் யோகி அரசை எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்திருந்தனர். இதையடுத்து முதல்வரின் அதிரடி உத்தரவின் பேரில் பாஸ்க்வான் காவல் நிலையத்தில் வழக்கு பதிவானது. இதில், பாஜகவின் தேசிய துணைத் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ரேகா வர்மாவிற்கு நெருக்கமானவரான யாஷ் வர்மா மீது வழக்கு பதிவாகி அவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அங்கு பாதுகாப்பு பணி யில் இருந்த டி.எஸ்.பி, 2 ஆய்வாளர்கள் மற்றும் 3 உதவி ஆய்வாளர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அந்த 6 பேரும் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
உ.பி.யின் 75 மாவட்டங்களின் 3,050 கிராமப் பஞ்சாயத்து உறுப்பினர்களில் பாஜகவிற்கு 768 இடங்கள் கிடைத்தன. எதிர்க்கட்சிகளில் சமாஜ்வாதிக்கு 759, பகுஜன் சமாஜ் கட்சிக்கு 319, காங்கிரஸிற்கு 125, ராஷ் டிரிய லோக் தளம் 69 மற்றும் சுயேச்சைகளுக்கு 1,071 இடங் கள் கிடைத்தன. குறிப்பாக அயோத்யா, வாரணாசி, மதுரா மற்றும் கோரக்பூரில் பாஜகவிற்கு மிகக் குறைந்த உறுப்பினர்கள் கிடைத்தனர்.
உ.பி.யில் அடுத்த வருடம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு முன்னோடியாக பஞ்சாயத்து தேர்தல் கருதப்படுகிறது. இதன் காரணமாக உ.பி.யின் பல பஞ்சாயத்துக்களில் பாஜக மற்றும் எதிர்க்கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இதில் சில இடங்களில் துப்பாக்கி சூடும், கையெறி குண்டுகள் வீசுவதும் நடைபெற்றது. இதற்கு அஞ்சி போலீஸார் தப்பி ஓடும் நிலையும் உருவாகி உள்ளது.