

கட்சித் தாவல் தடை சட்டம் குறித்து கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரும் மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் தொடங்கி உள்ளது.
சமாஜ்வாடி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அமர் சிங்கும் மக்களவை உறுப்பினராக இருந்த நடிகை ஜெயப் பிரதாவும் கடந்த 2010-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இதையடுத்து நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க தங்களுக்கு அனுமதி மறுக்கப்படலாம் என்று கருதிய இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
சமாஜ்வாடி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் ஏதாவது ஒரு பிரச்சினையில் கட்சியின் கொறடா உத்தரவை மீறினால் கட்சித் தாவல் தடுப்பு சட்டத்தின் கீழ் எங்களது பதவி பறிக்கப்படுமோ என்று அச்சப்படுகிறோம் என அந்த மனுவில் கூறியிருந்தனர்.
இந்த மனு நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், அருண் மிஸ்ரா மற்றும் பிரபுல்ல சி பன்ட் ஆகியோர் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது 2 முன்னாள் எம்பிக்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “அமர் சிங்கும், ஜெயப் பிரதாவும் தனிக் கட்சி தொடங்காத நிலையில், கட்சித் தாவல் தடை சட்டம் தொடர்பாக 1996-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இவர்களுக்கு பொருந்தாது” என்றார்.
இதைக் கேட்டுக்கொண்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை வரும் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதுகுறித்து வழக்கறிஞர் பி.எஸ்.சுதீர் கூறும்போது, “அமர் சிங்கும் ஜெயப் பிரதாவும் கட்சியிலிருந்து ராஜினாமா செய்யவும் இல்லை. புதிய கட்சி தொடங்கவும் இல்லை. இந்நிலையில், ஜி.விஸ்வநாதன் வழக்கில், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இவர்களுக்கு பொருந்தாது என்று வாதிட்டேன்” என்றார்.
ஒரு அரசியல் கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது நியமிக்கப்பட்ட உறுப்பினர், கட்சியிலிருந்து நீக்கப்பட்டாலும் அவர் கட்சியின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவர் என உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.