

கேரளாவில் ஜிகா வைரஸ் பரவியுள்ள தகவல் வெளியாகியுள்ள நிலையில் இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக 6 பேர் கொண்ட மத்திய குழு அம்மாநிலம் செல்கிறது.
கேரளாவில் கரோனா வைரஸ் 2-வது அலையின் பாதிப்பே இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதற்குள் ஜிகா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அம்மாநிலத்தில் கடந்த மாதம் சிகிசைக்கு வந்த 24வயதான கர்ப்பணி பெண்ணுக்கு காய்ச்சல், தலைவலி, தோலில் தடிப்புகள் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, அவருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டு கொசுக்கள் மூலம் பரவும் ஜிகா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 13 பேரின் மாதிரிகள் புனேயில் உள்ள தேசிய வைரலாஜி ஆய்வக நிறுவனத்துக்கு பரிசோதனைக்காக கேரள அரசு அனுப்பி வைத்துள்ளது
ஜிகா வைரஸ் பாதிக்கப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தோலில் நமைச்சல், அரிப்பு, உடல்வலி, மூட்டுகளில் வலி, தலைவலி போன்றவை ஏற்படக்கூடும். ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவும் ஜிகா வைரஸ், மஞ்சள் காய்ச்சல், டெங்கு காய்ச்சலும் பரவுகிறது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு பரவினால், அவர் மூலம் வயிற்றில் உள்ள சிசுவும் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவு ஏற்படலாம். இதனால் குறைப்பிரசவம் அல்லது கருச்சிதைவும் கூட சில நேரங்களில் ஏற்படலாம்.
ஜிகா வைரஸ் 3 முதல் 14 நாட்கள்வரை உடலில் இருக்கும் பாதிப்பு ஏற்பட்ட 2 முதல் 7 வது நாளில் அறிகுறிகள் காணப்படும். இதுவரை ஜிகா வைரஸுக்கு எந்தத் தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை.
கேரளாவில் ஜிகா வைரஸ் பரவியுள்ள தகவல் வெளியாகியுள்ள நிலையில் இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக 6 பேர் கொண்ட மத்திய குழு அம்மாநிலம் செல்கிறது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறியதாவது:
நாடுமுழுவதும் கரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் கேரளாவும் ஒன்றாகும். இந்தநிலையில் அந்த மாநிலத்தில் ஜிகா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
எனவே தொற்று நோய் பரவல் கட்டுப்பாட்டு நிபுணர் தலைமையில் 6 பேர் கொண்ட மத்திய குழு கேரளா செல்கிறது. அந்த குழு ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளிக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.