Last Updated : 09 Jul, 2021 04:37 PM

 

Published : 09 Jul 2021 04:37 PM
Last Updated : 09 Jul 2021 04:37 PM

சவால்களைச் சமாளிப்பாரா? விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக ஜோதிர் ஆதித்யா சிந்தியா பொறுப்பேற்பு

காங்கிரஸிலிருந்து விலகி, கடந்த ஆண்டு பாஜகவில் சேர்ந்த ஜோதிர் ஆதித்யா சிந்தியா விமானப் போக்குவரத்துத் துறையின் 33-வது அமைச்சராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

முன்னாள் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரியின் முன்பாக, சிந்தியா அமைச்சராகப் பொறுப்பேற்றார். அவருக்கு மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வாழ்த்து தெரிவித்தார்.

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டதில் ஜோதிர் ஆதித்யாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்ட நிலையில், அவருக்கு விமானப் போக்குவரத்துத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜோதிர் ஆதித்யா சிந்தியாவின் தந்தை மாதவராவ் சிந்தியாவும் 1991 முதல் 1993 வரை விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராகத்தான் இருந்தார். காங்கிரஸ் கட்சியில் ஜோதிர் ஆதித்யா சிந்தியா இருந்தபோது, யுபிஏ முதல் அரசில் தகவல் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தார்.

காங்கிரஸ் தலைமையில் 2-வது முறையாக மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, 2009 முதல் 2012 வரை வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சராகவும், 2012 முதல் 2014-ம் ஆண்டுவரை மின்துறை அமைச்சராகவும் சிந்தியா இருந்தார்.

மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத்துடன் ஏற்பட்ட பிரச்சினையால் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஜோதிர் ஆதித்யா சிந்தியா விலகினார். இவர் விலகலைத் தொடர்ந்து ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேர் விலகி பாஜகவில் சேர்ந்தனர். ஜோதிர் ஆத்தியாவின் வருகையால் பாஜக மீண்டும் மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது.

மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா பதவி ஏற்றபின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “ எனக்கு வாய்ப்பளித்த பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறேன். எனக்குக் கொடுத்த பொறுப்புகளைக் கடின உழைப்புடன், தீர்மானத்துடன் நிறைவேற்றி, எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவேன். என் தந்தையின் கனவுகளை நிறைவு செய்வேன்” எனத் தெரிவித்தார்.

சவால்கள்:

விமானப் போக்குவரத்துத் துறையில் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோதிர் ஆத்தியா சிந்தியா முன் கடும் சவால்கள் காத்திருக்கின்றன. கரோனா பரவல் காரணமாக பல்வேறு நாடுகளுக்கும் இன்னும் விமானப் போக்குவரத்து சீராகவில்லை. விமான எரிபொருள் உயர்வு, விமானத்தில் முழுமையாகப் பயணிகளை அமர்த்தி, இருக்கைகளை அமர்த்திச் செல்லக் காத்திருக்க வேண்டும்.

ஏர் இந்தியா நிறுவனம் பெரும் இழப்பில் இருப்பதால் அதன் பங்குகளை விற்க கடந்த இரு ஆண்டுகளாக மத்திய அரசு போாரடி வருகிறது. ஆனால், பங்குகளை வாங்க எந்த நிறுவனமும் இதுவரை முழுமையாக வரவில்லை. ஏர் இந்தியா விமானத்தின் பங்குகளை, விற்பனையை விரைவுபடுத்த வேண்டிய நிலையில் சிந்தியா உள்ளார்.

விமான நிலையங்களைத் தனியாரிடம் லீஸுக்கு விடுவது, தனியார் மயமாக்குவதும் பெரும் சவாலாக சிந்தியா முன் இருக்கிறது. இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஊழியர்கள் மத்தியிலும் எதிர்ப்பு நிலவுகிறது.

இந்திய விமானப் போக்குவரத்து ஆணையம் பெரும் இழப்பில் இருப்பதால் 17 ஆயிரம் ஊழியர்களுக்கு ஊதியக் குறைப்பு செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது. அதே நேரத்தில் விமானப் போக்குவரத்துத் துறையில் குறைந்தபட்ச அளவு வேலைவாய்ப்புகளையும் உருவாக்க வேண்டியதும் இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் சவாலானதாக இருக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x