Published : 09 Jul 2021 02:48 PM
Last Updated : 09 Jul 2021 02:48 PM

12 -18 வயதுடையோருக்கு செப். முதல் ஸைடஸ் தடுப்பூசி- தடுப்பூசி நிபுணர் குழு தகவல்

பள்ளிகள் திறப்பு உள்ளிட்ட பிரச்சினைகளைக் கருத்தில்கொண்டு 12 -18 வயதுடைய சிறார்களுக்கு செப்டம்பர் மாதம் முதல் ஸைடஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என்று தேசிய அளவிலான தடுப்பூசி நிபுணர் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துத் தடுப்பூசி நிர்வாகத்தின் தேசிய நிபுணர் குழுத் தலைவர் என்.கே.அரோரா தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர் கூறும்போது, ''சிறார்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் விவகாரத்தில் கோவாக்சின் 3-வது கட்ட ஆய்வு தொடங்கியுள்ளது. என் கணிப்பின்படி வரும் செப்டம்பர் மாத இறுதியில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டிருக்க வேண்டும். ஆண்டின் இறுதியிலோ அல்லது ஜனவரி- பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்திலோ நாம் 2 - 18 வயது வரையிலானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தலாம் என்று நினைக்கிறேன்.

எனினும் ஸைடஸ் கேடில்லா தடுப்பூசி அதற்கு முன்பே பயன்பாட்டுக்கு வந்துவிடும். இந்தத் தடுப்பூசி பயன்பாட்டுக்கான அவசர கால அனுமதி சில வாரங்களுக்குள் கிடைத்துவிடும். அதன் பிறகு, 12 -18 வயதுடைய சிறார்களுக்கு செப்டம்பர் மாதம் இறுதிக்குள் ஸைடஸ் தடுப்பூசி செலுத்தப்படும்.

பள்ளிகள் திறப்பு மற்றும் பிற விவகாரங்கள் இப்போது முக்கியப் பிரச்சினையாக உள்ளன. இவற்றைக் கருத்தில் கொண்டு குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்படும்'' என்று என்.கே.அரோரா தெரிவித்தார்.

கரோனா 3-வது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்று சில ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. எனினும் நாட்டின் குழந்தைகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், ''இந்தக் கணிப்பு தவறு, குழந்தைகள் நிச்சயம் பாதுகாப்பாக இருப்பார்கள்'' என்று தெரிவித்துள்ளன.

கரோனா 2-வது அலை நாட்டில் முடிவடையாத நிலையில், ஆகஸ்ட் 2-வது வாரத்தில் 3-வது அலை உருவாக வாய்ப்புள்ளது என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ள நிலையில், மத்திய சுகாதாரத் துறைக்குப் புதிய அமைச்சராக மன்சுக் மாண்டவியா நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x