Last Updated : 09 Jul, 2021 11:33 AM

 

Published : 09 Jul 2021 11:33 AM
Last Updated : 09 Jul 2021 11:33 AM

தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுடன் நட்புறவோடு செல்லவே விரும்புகிறோம்: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கருத்து

ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி | கோப்புப் படம்.

அமராவதி

நீர்ப் பங்கீடு விவகாரத்தில் தமிழகம், தெலங்கானா, கர்நாடகாவுடன், நட்புறவான, சுமுகமான உறவோடு செல்லவே விரும்புகிறோம் என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் விவசாயிகள் தினமும், முன்னாள் முதல்வரும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தையுமான ராஜசேகர ரெட்டியின் பிறந்த நாளும் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:

''நீர் விவகாரத்தில் எப்போதும் அரசியல் செய்யக்கூடாது. அனைத்து மாநிலங்களிலும் விவசாயிகள் ஒன்றுதான், இதில் அரசியல் கூடாது. ஆனால், நீர்ப் பங்கீடு விவகாரம் ஊடகங்களில் மிகவும் பெரிதாக விவாதிக்கப்படுகிறது.

எங்களுக்கு எந்த மாநிலத்தோடும் நீர்ப் பங்கீடு தொடர்பாக பிரச்சினை செய்யும் எண்ணம் கிடையாது. தமிழகம், தெலங்கானா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களுடன் நட்புறவுடன், சுமுகமான உறவைப் பராமரிக்கவே விரும்புகிறோம். அவர்களின் விவகாரங்களில் தலையிடமாட்டோம். ஆனால், தெலங்கானாவைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வரம்பு மீறிப் பேசுகிறார்கள்.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலமாக இருந்தபோது, கிருஷ்ணா நதி நீர் ராயலசீமா, கடலோர ஆந்திரா, தெலங்கானா ஆகிய 3 பகுதிகளுக்கும் பிரித்து வழங்கப்பட்டது. ராயலசீமா பகுதிக்கு 144.70 டிஎம்சி, கடலோர ஆந்திரா பகுதிக்கு 367.34 டிஎம்சி நீர், தெலங்கானாவுக்கு 298.96 டிம்சி நீர் வழங்கப்பட்டது.

ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டபின், மத்திய அரசு, ஆந்திரா, தெலங்கானா ஆகியவை சேர்ந்து 2015-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி நீர்ப் பங்கீடு குறித்து ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த அடிப்படையில்தான் நீர்ப் பங்கீடு நடக்கிறது.

ஆனால், தெலங்கானா அரசு பழமுரு ரங்காரெட்டி, திண்டி அணைத் திட்டங்களைச் செயல்படுத்தும்போது அமைதியாக இருந்த தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரசேகர் ராவ், இப்போது இந்த விவகாரத்தை ஏன் எழுப்புகிறார்? நாங்கள் பிற மாநிலங்களின் விவகாரத்தில் தலையிடமாட்டோம். எங்கள் நோக்கம் அண்டை மாநிலங்களுடன் உறவு சிறப்பாக இருந்தால், நன்றாக இருக்கும் என்பதுதான்''.

இவ்வாறு ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x