

கேரள அதிகாரிகளின் கெடுபிடி, அத்துமீறல் ஆகியவற்றால் ரூ.3500 கோடி முதலீடு செய்யும் திட்டத்தைப் புகழ்பெற்ற கிட்டெக்ஸ் கார்மென்ட்ஸ் நிறுவனத்தின் அதிபர் சாபு எம்.ஜேக்கப் ரத்து செய்தார். இதனால் அவரைத் தங்கள் மாநிலத்தில் முதலீடு செய்ய தெலங்கானா அரசு தனி விமானம் அனுப்பி சிவப்புக் கம்பளம் விரித்து அழைத்துள்ளது.
தெலங்கானா அரசின் அழைப்பை ஏற்று, ரூ.3500 கோடி முதலீடு செய்யும் திட்டம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த தொழிலதிபர் சாபு எம்.ஜேக்கப் இன்று ஹைதராபாத் செல்ல உள்ளார்.
தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மகனும், தொழில்துறை அமைச்சர் கே.டி.ராமா ராவ் அழைப்பின் பெயரில் சாபு எம்.ஜேக்கப் இன்று ஹைதராபாத் செல்ல உள்ளார். இதற்காக இன்று கொச்சிக்கு, தெலங்கானா அரசு சார்பில் சிறப்பு விமானம் சாபு ஜேக்கப்பை அழைத்துச் செல்ல வருகிறது.
தொழிலதிபர் சாபு எம்.ஜேக்கப், நிறுவன இயக்குநர்கள் பெனி ஜோஸப், கேஎல்வி நாராயண், துணைத் தலைவர் ஹர்கிஷன் சிங் சோதி, தலைமை நிதிஅதிகாரி பாபி மைக்கேல், பொது மேலாளர் சாஜி குரியன் ஆகியோர் கொண்ட குழு ஹைதராபாத்துக்கு வெள்ளிக்கிழமை தனி விமானத்தில் புறப்பட்டுச் செல்வதாக கிட்டெக்ஸ் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஏற்கெனவே தெலங்கானா அரசுடன் முதலீடு தொடர்பாக முதல்கட்டப் பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், அடுத்தகட்டமாக அமைச்சருடன் பேச கிட்டெக்ஸ் நிறுவனக் குழுவினர் செல்கின்றனர்.
கேரளாவில் புகழ்பெற்றதாக விளங்கும் குழந்தைகளுக்கான ஆடை தயாரிப்பு நிறுவனமான கிட்டெக்ஸ் நிறுவனத்தில் கேரள அதிகாரிகள் கடந்த ஒரு மாத்தில் 11 முறை திடீரென ஆய்வு நடத்தினர். எந்த அறிவிப்பும் இல்லாமல் நடத்தப்பட்ட ஆய்வால் நிறுவனத்தினர் கடும் அதிருப்தியில் இருந்தனர். இதனால் 2020ஆம் ஆண்டு கேரள அரசுடன் ரூ.3,500 கோடி முதலீடு செய்ய மேற்கொண்ட ஒப்பந்தத்தை கிட்டெக்ஸ் நிறுவனம் ரத்து செய்ய முடிவு செய்தது.
கிட்டெக்ஸ் நிறுவனம் கேரளாவில் முதலீட்டை ரத்து செய்வதை அறிந்த ஆந்திரப் பிரதேசம், தமிழகம், கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட 6 மாநிலங்கள் கிட்டெக்ஸ் நிறுவனத்தைத் தங்கள் மாநிலத்துக்கு முதலீடு செய்ய அழைக்க முயன்றதாகத் தகவல் வெளியானது. இதில் தெலங்கானா அரசு பல்வேறு சலுகைகளை முன்வைத்து நடத்திய பேச்சுவார்த்தை, அழைப்பை ஏற்று ஹைதராபாத்துக்கு இன்று செல்கின்றனர்.