

திருமணம், இறுதிச்சடங்கில் பங்கேற்க 20 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கிவிட்டு, மது வாங்குவதற்காக மதுக்கடையில் முன் சமூக விலகலைக் கடைபிடிக்காமல் 500 பேர் வரிசையில் நிற்க அனுமதிப்பதுதான் கரோனா கட்டுப்பாடா என்று கேரள அரசை உயர் நீதிமன்றம் கடுமையாகச் சாடியுள்ளது.
கேரள அரசு சார்பில் நடத்தப்படும் பெவ்கோ மதுபானக் கடைகள் முன்பு மக்கள் மது வாங்குவதற்கு ஏராளமானோர் வரிசையில் நிற்கின்றனர். இதை ஒழுங்குபடுத்தக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மேலும், கரோனா காலத்தில் சமூக விலகலைக் கடைபிடிக்காமல் கூட்டமாக நின்று மது வாங்குவது குறித்து உயர் நீதிமன்றமும் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து இருந்தது.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி தேவன் ராமச்சந்திரன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் கேரள அரசின் செயல்பாட்டையும், மதுபான விற்பனை நிறுவனமான பெவ்கோவையும் கடுமையாக விமர்சித்தார். நீதிபதி கூறியதாவது:
கரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு திருமண விழாக்கள், இறுதிச்சடங்கு போன்றவற்றில் 20 பேருக்கு மேல் பங்கேற்கத் தடை விதித்து கேரள அரசு உத்தரவி்ட்டுள்ளது. ஆனால், மதுவாங்க மட்டும் மதுக்கடைகள் முன் 500க்கும் மேற்பட்டோர் வரிசையில், சமூக விலகலைக் கடைபிடிக்காமல் நிற்கிறார்கள். இதுதான் கரோனாக் கட்டுப்பாடா. வரிசையில் நிற்பவர்கள் சமூக விலகலைக் கடைபிடிக்கவில்லை.
கரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் மதுக்கடைகள் முன் இவ்வாறு கூட்டம் சேருவதை அனுமதிக்க முடியாது. நாட்டிலேயே கரோனா தொற்று தினசரி அதிகமாக இருக்கும் மாநிலங்களில் ஒன்றாக கேரளாவும் இருந்து வருகிறது. நூற்றுக்கணக்கான மக்கள் சமூக விலகலைக் பின்பற்றாமல் மது வாங்க வரிசையில் நிற்பது, கரோனா தொற்றுப் பரவலை மேலும் அதிகப்படுத்தும்.
மதுக்கடைகள் முன் கூட்டம் சேருவதைத் தடுக்கவும், அதை முறைப்படுத்தவும் முதல் லாக்டவுனில் வசதி இருந்தது. ஆனால், இந்தமுறை எந்தவிதமான கட்டுப்பாடும், செயல்முறையும் அறிமுகப்படுத்தவில்லை. மதுக்கடைகள் முன் மக்கள் கூட்டம் சேருவதைத் தடுக்க அரசு தவறிவிட்டது.
மதுக்கடைகள் முன் நீண்ட வரிசையில் நிற்கும் மக்களின் கவுரவத்தை அரசின் மரியாதையாகக் கருத வேண்டும். நீங்கள் உங்கள் பொருட்களை விற்கிறீர்கள், இது ஏதோ சாப்பிடும் பொருள் அல்ல, மக்களுக்கு கேடுவிளை விக்கக்கூடியது. கூட்டத்தினரைக் கட்டுப்படுத்த கடந்த 2017ம் ஆண்டு உத்தரவிடப்பட்டும், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது அரசின் நிர்வாகச் செயல்முறை தோல்வி அடைந்ததுள்ளது தெளிவாகத் தெரிகிறது.
மதுவாங்க வரும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவது மாநகராட்சியின் கடமையாகும். மக்கள் அவர்களுக்கு விருப்பமான மது வகைகளை நாகரீகமான முறையில் வாங்க உதவ வேண்டும் அவர்களின் சுயமரியாதையும் காக்கப்பட வேண்டும். கரோனா பரவல் தொடர்ந்து அதிகரிப்பது புதியவிதமான சிக்கலை ஏற்படுத்துகிறது.
இன்னும் நாம் கரோனா 2-வது அலையிலிருந்து வெளியேவரவில்லை. இதே நிலை தொடர்ந்தால், கரோனா 3-வது அலை வெகு தொலைவில் இல்லை. இந்த வழக்கை வரும் 16-ம் தேதி ஒத்தி வைக்கிறேன். அப்போது, பெவ்கோ நிறுவனத்தின் மேலாளர், கலால்வரி ஆணையர் ஆன்-லைன் மூலம் ஆஜராக வேண்டும்.
இவ்வாறு நீதிபதி தெரிவி்த்தார்