

கரோனாவுக்கு எதிரான போரில் மனநிறைவு, சுயதிருப்தி போன்ற விஷயங்களுக்கு இடம் அளிக்கக் கூடாது. சிறிய தவறுகூட நாட்டுக்கு நீண்ட காலத்துக்குக் கடும் விளைவுகளை உருவாக்கிவிடும் என்று புதிதாகப் பதவி ஏற்ற அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி நேற்று அறிவுரை வழங்கினார்.
2019-ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான அரசு 2-வது முறையாகப் பதவி ஏற்றபின், அமைச்சரவையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. இதையடுத்து, அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டதில் ஏற்கெனவே அமைச்சர்களாக இருந்தவர்களில் 12 பேர் நீக்கப்பட்டு, புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்தவகையில் 43 அமைச்சர்கள் புதிதாக அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர்.
புதிதாகப் பதவி ஏற்ற அமைச்சர்கள் மத்தியில் காணொலி வாயிலாகப் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் பேசியது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில் “ சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பிற கரோனா போர்வீரர்கள் உதவியுடன் கரோனாவுக்கு எதிரான போரை இந்தியா தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. ஆனால், மக்கள் முகக்கவசம் இன்றியும், சமூக விலகலைக் கடைப்பிடிக்காமலும் பல்வேறு இடங்களில் இருப்பதைக் காணமுடிகிறது. இது நல்லவிதமானது அல்ல. கரோனா பரவல் குறையவில்லை என்ற பயம் இருக்க வேண்டும்.
கரோனாவுக்கு எதிரான போரில் சுயதிருப்தி, மனநிறைவுக்கு இடம் அளிக்கக் கூடாது. இதில் நாம் செய்யும் சிறிய தவறுகூட நீண்டகாலத்துக்கு நாட்டுக்கு விளைவுகளை ஏற்படுத்தும். தடுப்பூசி செலுத்துதல், பரிசோதனைகள் போன்றவற்றை இந்தியா அதிகப்படுத்தி வருகிறது. ஆனால், ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களாகத் தொற்று வேகம் அதிகரித்து வருவது இந்தியாவுக்குக் கூட எச்சரி்க்கையாக அமைந்துள்ளது.
ஆதலால், கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்ற அமைச்சர்கள் உறுதியாக இருக்க வேண்டும்.
கேரளாவிலும், மகாராஷ்டிராவிலும் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருப்பது கவலைக்குரியதாக இருக்கிறது. புதிதாகப் பதவி ஏற்றுள்ள அமைச்சர்கள், தங்களுக்கு முந்தைய அமைச்சர்களின் அனுபவங்களைக் கேட்டுப் பெற்றுச் செயலாற்ற வேண்டும்.
அலுவலகத்துக்கு அமைச்சர்கள் சரியான நேரத்துக்கு வர வேண்டும். தங்களின் சக்தியையும், புத்திசாலித்தனத்தையும், நிர்வாகத் திறமையையும் சிறப்பாகச் செயல்படுத்தி, கடைக்கோடியில் உள்ள மக்களுக்கும் கிடைக்குமாறு செய்ய வேண்டும். ஊடகங்களிடமும், விளம்பரத்துக்காகவும் தேவைற்ற ரீதியில் பேசுவதையும், கருத்துகளைக் கூறுவதையும் தவிர்க்க வேண்டும்'' என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.