Published : 09 Jul 2021 06:35 AM
Last Updated : 09 Jul 2021 06:35 AM

நாட்டிலேயே சுகாதார உள்கட்டமைப்பில் தமிழகம் சிறந்து விளங்குகிறது: உச்ச நீதிமன்ற நீதிபதி பாராட்டு

நாட்டிலேயே தமிழகம் சுகாதார உள்கட்டமைப்பில் சிறந்து விளங்குகிறது என்றும், அது கரோனா 2-வது அலையில் பிரதிபலித்துள்ளது எனவும் உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான புதிய காப்பீட்டுத்திட்டம் 2012 மற்றும் 2014-ன் கீழ் வலைப்பின்ன
லுக்குள் வராத மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவ சிகிச்சை
செலவை காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என்றும், பின்னர் அந்த தொகையை அரசிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம் எனவும் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பளித்து இருந்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்து இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில், ‘‘புதிய காப்பீட்டுத் திட்டத்தின்படி, காப்பீட்டு நிறுவனம் மற்றும் அரசுக்கும் இடையே ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு, குறிப்பிட்ட நோய்கள், மருத்துவ சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளை பணம் செலுத்தாமல் காப்பீட்டுத்திட்டத்தின் வாயிலாக வலைப்பின்னலுக்குள் வரும் பரிந்துரைக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் மட்டுமே அரசு ஊழியர்கள் இலசவ மருத்துவ சிகிச்சைகளைப் பெற முடியும். ஆனால் இந்திய அரசியல்அமைப்பு சட்டம் பிரிவு 21-ன் கீழ் வாழ்வுரிமையை பாதுகாக்கும் வகையில், வலையமைப்புக்குள் வராத மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களுக்கும் இந்த புதிய காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அதற்கான மருத்துவ செலவுத் தொகையை காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என் றும், பிறகு அந்த தொகையை அரசிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம் எனவும் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

அவ்வாறு கொடுத்த தொகையை அரசிடம் இருந்து திருப்பி வசூலிக்க முடியாது. மற்ற ஒப்பந்தம் போலவே காப்பீட்டு நிறுவன ஒப்பந்தமும் வணிகபரிவர்த்தனையுடன் தொடர்புஉடையது. வரையறுக்கப்பட்ட அறுவை சிகிச்சைகள் மற்றும் மருத்துவ சிகிச்சைக்கான பணமில்லா திட்டத்தில் ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு இரு தரப்பும் கட்டுப்பட வேண்டும் என்பதால் தனி நீதிபதியின் தீர்ப்பு ஏற்புடையதல்ல என வாதிடப்பட்டது.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில், காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் உரிமை கோருபவர்கள் தமிழ்நாடு மருத்துவ வருகை விதிகளின்படியும் செலவழித்த தொகையை திருப்பிக்கோர முடியும், என்றார்.

அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நாட்டிலேயே தமிழகம் சுகாதார உள்கட்டமைப்பில் சிறந்து விளங்குகிறது என்றும், அது கரோனா 2-வது அலையில் பிரதிபலித்துள்ளது எனவும் பாராட்டு தெரிவித்தார். பின்னர் நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x