Published : 09 Jul 2021 03:13 AM
Last Updated : 09 Jul 2021 03:13 AM

மீனாட்சி லெகி, மன்சுக் மாண்டவியா, ஜோதிராதித்ய சிந்தியா, அஸ்வினி வைஷ்ணவ் மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்

மீனாட்சி லெகி, மன்சுக் மாண்டவியா, ஜோதிராதித்ய சிந்தியா, அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் நேற்று மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

மத்திய இணை அமைச்சராக நேற்று முன்தினம் பதவியேற்ற மீனாட்சி லெகி (54), புதுடெல்லி தொகுதியில் இருந்து 2-வது முறையாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். பெண்கள் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பானபிரச்சினைகள் முதல் சட்டம் மற்றும் வளர்ச்சி வரையிலான பலபிரச்சினைகள் குறித்த போராட்டங்களில் முன்னிலையில் இருந்தவர். சிறந்த சொற்பொழிவாளர்.

மீனாட்சி லெகி, வெளியுறவு மற்றும் கலாச்சாரத் துறையின் இணை அமைச்சராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

டெல்லி பல்கலைக்கழக சட்டப்பட்டதாரியான இவர், ஒரு வழக்கறிஞராக, ஆயுதப் படைகளில் உள்ள பெண் அதிகாரிகளுக்கு ஆண்களுக்கு சமமான பணிக்காலத்தை வழங்கக் கோரியவழக்கு உட்பட பல்வேறு முக்கியவழக்குகளில் ஆஜராகி வாதாடியுள்ளார். கடந்த 2019-ல் ‘நாட்டின் காவலாளி திருடன்’ என பிரதமர் மோடிக்கு எதிராக ராகுல் காந்தி கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதில்மீனாட்சி லெகி தொடர்ந்த அவதூறு வழக்கால் ராகுல் மன்னிப்பு கேட்க நேர்ந்தது.

பாஜகவில் மீனாட்சி லெகியின் பயணம் 2010-ல் தொடங்கியது. பாஜக மூத்த தலைவர் நிதின் கட்கரி அழைப்பில் பேரில் அவர்பாஜகவில் இணைந்தார். அதே ஆண்டில் பாஜக மகளிர் அணியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். பிறகு பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளராக, அரசியல் எதிரிகளை எதிர்கொள்ளும் அதேவேளையில், கட்சியின்கொள்கைகளை ஊடகங்களில் வெளிப்படுத்தி வந்தார்.

மன்சுக் மாண்டவியா

கப்பல் போக்குவரத்து துறையின் தனி அமைச்சராகவும் ரசாயனம் மற்றும் உரத்துறையின் இணை அமைச்சராகவும் இருந்தமன்சுக் மாண்டவியா, கேபினட்அமைச்சராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, ரசாயனம் மற்றும் உரத்துறையின் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நாடு போராடி வரும் வேளையில் சுகாதார அமைச்சராக இவரது நியமனம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மன்சுக் மாண்டவியா குஜராத்தின் சவுராஷ்டிரா பகுதியை சேர்ந்த, பாவ்நகர் மாவட்டத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர். குஜாரத்தில் இருந்து மாநிலங்களவைக்கு கடந்த 2012-ல் முதல்முறையாக தேர்ந்தெடுக்கப்படார். பிறகு 2018-ல் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

ஜோதிராதித்ய சிந்தியா

மத்திய பிரதேசத்தில் பாரம்பரியமிக்க குவாலியர் குடும்பத்தில் பிறந்தவர் ஜோதிராதித்ய சிந்தியா. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதார படிப்பிலும், ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மை படிப்பிலும் பட்டம் பெற்றவர். தனது தந்தை மாதவராவ் சிந்தியாவின் வழியை பின்பற்றி காங்கிரஸில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு நெருக்கமானவராக மாறினார். இதன் தொடர்ச்சியாக, 2004, 2009-ம் ஆண்டுகளில் அமைந்த பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில் முக்கிய இலாக்காக்களை அவர் வகித்தார்.

இந்நிலையில், 2018-ம் ஆண்டுநடந்த மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பதற்கு மிக முக்கியகாரணமாக விளங்கியவர் ஜோதிராதித்ய சிந்தியா. அதற்கு கைமாறாக அவர் அம்மாநில முதல்வர் பதவியை எதிர்பார்த்தார். ஆனால்,அவருக்கு அப்பதவி கிடைக்கவில்லை. மேலும், மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களால் அவர்தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டார்.

இதுகுறித்து, தனது நண்பரான ராகுல் காந்தியிடம் அவர் பல முறைகூறியும் எந்தப் பலனும் இல்லை. இதனால் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாகவே தனது 22 ஆதரவு எம்எல்ஏக்களுடன் காங்கிரஸை விட்டு விலகி பாஜகவில் இணைந்தார். இதனால் அங்கு கமல்நாத் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சி மலர்ந்தது. இதற்கான அங்கீகாரமாகவே, அவருக்கு விமான போக்குவரத்து துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அஸ்வினி வைஷ்ணவ்

தகவல் தொழில்நுட்பம் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சராக அஸ்வினி வைஷ்ணவ் நேற்று தனது புதிய பொறுப்பை ஏற்றுக் கொண்டார். ரயில்வேத் துறையும் இவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதிகாரியாக இருந்து அரசியல்வாதியான இவருக்கு அமைச்சரவையில் முக்கியபொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. அஸ்வினி வைஷ்ணவ் கான்பூர் ஐஐடியில் படித்து பின்னர் 1994-ம் ஆண்டில் அகில இந்திய அளவில் 27வது ரேங்கில் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வு பெற்றார். ஒடிசாவில் பலாசோர், கட்டாக் மாவட்டங்களில் 2003 -ம் ஆண்டு வரை மாவட்ட கலெக்டராக பணியாற்றியவர்.

பின்னர், பிரதமராக இருந்தவாஜ்பாயின் துணை செயலாளராகவும் பதவி வகித்து பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். மர்மகோவா துறைமுகத்தின் தலைவராகவும் அஸ்வினி வைஷ்ணவ் 2 ஆண்டுகள்பணியாற்றியுள்ளார். ஒடிசாவில்இருந்து 2019-ல் மாநிலங்களவைக்கு அஸ்வினி வைஷ்வண் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போது, இவருக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் ரயில்வே என்ற இரு முக்கியமான அமைச்சக பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x