சர்வதேச அளவில் கடல்சார் பாதுகாப்புக்கு தீவிரவாதமும், கடற்கொள்ளையும் முக்கிய சவால்களாக உள்ளன: கடற்படை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கவலை

சர்வதேச அளவில் கடல்சார் பாதுகாப்புக்கு தீவிரவாதமும், கடற்கொள்ளையும் முக்கிய சவால்களாக உள்ளன: கடற்படை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கவலை
Updated on
2 min read

சர்வதேச அளவில் கடல்சார் பாது காப்புக்கு தீவிரவாத அச்சுறுத்தலும், கடற்கொள்ளையும் 2 முக்கிய சவால் களாக உருவெடுத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித் துள்ளார்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத் தில் சர்வதேச கடற்படை விழா நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது இந்திய கடற்படையின் வலிமை மற்றும் அதன் பல்வேறு பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அதை பிரதமர் பார்வையிட்டார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், ஆந்திர முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு, மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர், ராணுவ தலைமை தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹாக், கடற்படை தலைமை தளபதி அட்மிரல் ஆர்.கே.தோவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

கடல்சார் பாதுகாப்புக்கு கடல்வழி தீவிரவாதம் மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இதனால் இந்தியா நேரடியாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக, கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி கடல் வழியாக மும்பையில் ஊடுருவிய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 166 பேர் கொல்லப்பட்டனர். இத்தகைய தீவிரவாத செயல்கள், பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக உள்ளன.

அடுத்தபடியாக கடற்கொள்ளையும் மிகப்பெரிய சவாலாக உள்ளது. குறிப் பாக, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் சரக்கு கப்பல்களை குறி வைத்து சோமாலியா கடற்கொள்ளை யர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதுதவிர, உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் உற்பத்தியில் 60 சதவீதம் கடல் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. எனவே, எரிசக்தித் துறையின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளது.

எனவே, கடல்சார் பாதுகாப்பு தொடர் பான சவால்களை எதிர்கொள்வதற் கான திறனை வளர்த்துக்கொண்டால் மட்டுமே கடல் வளங்களை பயன் படுத்திக் கொள்ள முடியும். இதற்கு உலகம் முழுவதும் உள்ள கடற்படை யினரும் கடல்சார் அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண் டியது அவசியம்.

உலக நாடுகளிடையே அமைதி, நட்பு, நம்பிக்கை ஆகியவற்றை வளர்த் துக் கொள்வதற்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் கடல் பகுதியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்தியாவைப் பொருத்தவரையில், சிந்து சமவெளி நாகரிகம் தொடங்கிய காலத்திலிருந்தே கடல்வழி தொடர்பை பராமரித்து வந்துள்ளது. எனவே, மத்திய அரசு முன்னுரிமை வழங்கும் கொள்கைகளில் ஒன்றாக கடல்வழி பாதுகாப்பும் இடம்பிடித்துள்ளது.

இதுபோல சுதந்திரமான கடல்வழி போக்குவரத்துக்கு உலக நாடுகள் மதிப்பளித்து தேவையான ஒத்துழைப்பு தர வேண்டும். அதைவிடுத்து போட்டி போடக்கூடாது. (தென் சீன கடல் பகுதிக்கு சொந்தம் கொண்டாடும் சீனாவை மறைமுகமாக சாடும் வகையில் இவ்வாறு தெரிவித்தார்).

3-வது இந்திய-ஆப்பிரிக்க உச்சி மாநாடு மற்றும் இந்திய-பசிபிக் தீவு ஒத்துழைப்பு மாநாடு ஆகியவற்றை இந்தியா நடத்தியது. அந்த வகையில், முதன்முறையாக சர்வதேச கடல்சார் உச்சி மாநாடு வரும் ஏப்ரல் மாதம் நடை பெறும். இந்த விழாவில் பங்கேற்றுள்ள இந்திய கடற்படை கப்பல்களில் 37, நம் நாட்டில் தயாரிக்கப்பட்டவை. வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். கடலோர பகுதிகளில் உள்ள இளைஞர்களை நமது உண்மையான சொத்தாக பார்க்கிறேன். ஏனெனில் அவர்களுக்கு இயற்கையாகவே கடலைப் பற்றிய ஆழமான புரிதல் உண்டு. இவ்வாறு மோடி தெரிவித்தார்.

அனைவருக்கும் பயன்பட வேண்டும்

ஒடிஷா மாநிலம் ஜத்னியில் உள்ள தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி (நைசெர்) நிறுவனத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய வளாகத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:

ஆராய்ச்சியில் ஈடுபடும் அனை வருக்கும் உலகப் புகழ்பெற்ற நோபல் பரிசு கிடைப்பதில்லை. ஆனால், அவர்களது கண்டுபிடிப்புகளால் சாதாரண மக்களும் பயனடையும் வகையில் நடவடிக்கை எடுப்பதுதான் அவர்களுக்கு நாம் வழங்கும் உண்மையான விருது ஆகும்.

மேலும் அறிவியல், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் மலிவான விலையில் கிடைக்க முன்னுரிமை வழங்க வேண்டும். கடல் மற்றும் ஆகாயத்தில் ஏராளமான இயற்கை வளங்கள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்திக் கொள்வது குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in