Published : 19 Jun 2014 09:14 AM
Last Updated : 19 Jun 2014 09:14 AM

ஆளுநர்கள் அவசியமா? விவாதம் நடத்தக் கோருகிறது ஐக்கிய ஜனதா தளம்: பாஜகவுக்கு காங்கிரஸ் கண்டனம்

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களை மாற்ற பாஜக தீவிர முயற்சி செய்து வருகிறது. இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜக அரசு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என்றும், நிழல் யுத்தத்தில் ஈடுபட்டுள்ளது என்றும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

இந்நிலையில் ஆளுநர்கள் அவசியமா என்பது பற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என ஐக்கிய ஜனதா தளம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவர் கே.சி. தியாகி விடுத்துள்ள அறிக்கையில், ‘ஆளுநர்கள் விஷயத்தில் பாஜக அரசு தற்போது செய்வதைத்தான் கடந்த காலங்களில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செய்தது. கடந்த காலங்களில் பெரும்பாலான சமயங்களில் ஆளுநரின் அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆளுநர்களின் ஒரு சார்புத் தன்மை நீண்ட வரலாறு கொண்டது’ எனத் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில், தங்களது அதிகாரத்தை ஆளுநர்கள் தவறாகப் பயன்படுத்திய பல் வேறு சம்பவங்கள், பல்வேறு அரசுகளால் அவர்கள் மாற்றப் பட்டது ஆகியவற்றையும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “ஆளுநர்களின் நியமனம் குறித்த விவாதம் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. பிறகு ஆளுநர்களின் நியமனம் குறித்த நடவடிக்கைகளில் ஏன் கவனம் செலுத்த வேண்டும்?

வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், ஆளுநர்களின் நடத்தை விதிமுறை, செயல்பாடு, பொறுப்புடைமை ஆகியவை குறித்த அர்த்தம்பொதிந்த விவாதத்தைத் தொடங்க ஐக்கிய ஜனதா தளம் விரும்புகிறது. ஆளுநர் பதவி அவசியமா என்பது குறித்தும் விவாதிக்கப்படும் என கே.சி. தியாகி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கண்டனம்

காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி பாஜக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் தளத்தில், “ஆளுநர்களை ராஜினாமா செய்யும்படி நெருக்கடி கொடுப் பதன் மூலம், சிங்கால் விவகாரத்தில் அரசியல் அமர்வின் தீர்ப்பை பாஜக அரசு ஏன் மீறுகிறது. இதுதான் ஜனநாயகமா? எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் மகளிர் அணித் தலைவர் ஷோபா ஓஸா கூறுகையில், “ஆளுநர்களை மாற்றுவது, சில ஆணையங்களின் தலைவர்களை மாற்றுவது என்பன போன்ற அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதற்குப் பதிலாக, விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது ஆகியவற்றுக்கு பாஜக அரசு முன்னுரிமை கொடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸின் மற்றொரு மூத்த தலைவர் சந்தீப் தீட்சித் கூறுகையில், “ஆளுநர் பதவி என்பது அரசியலமைப்புப் பதவி. அப்பதவி தொடர வேண்டும். ஆளுநர்கள் வேறு அரசியல் சிந்தனைகள் உடையவர்கள் என்பதற்காக அவர்களை மாற்றக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளது” என்றார்.

பி.சி.சாக்கோ கூறுகையில், “ஆளுநர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் எனில், அவர்களை குடியரசுத் தலைவர் அவ்வாறு கேட்டுக்கொள்ள வேண்டும். அவருக்கு மட்டுமே அந்த உரிமை உண்டு. ஏதோ ஒரு அதிகாரி, ஆளுநர்களை பதவி விலகும்படி கோரக்கூடாது. அரசாங்கம் நிழல்யுத்தத்தில் ஈடுபட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x