Last Updated : 08 Jul, 2021 05:21 PM

 

Published : 08 Jul 2021 05:21 PM
Last Updated : 08 Jul 2021 05:21 PM

மத்திய கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார் தர்மேந்திர பிரதான்: புதிய கல்விக் கொள்கைக்குப் புகழாரம்

மத்திய கல்வித்துறை அமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்ட தர்மேந்திர பிரதான் | படம்: ஏஎன்ஐ.

புதுடெல்லி

மத்திய கல்வித்துறை அமைச்சராக தர்மேந்திர பிரதான் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். புதிய கல்விக் கொள்கையில் இந்தியாவின் கல்வி முறை அசுரத்தனமான அடி எடுத்து வைத்துள்ளது என்று தர்மேந்திர பிரதான் புகழாரம் சூட்டினார்.

மத்திய கல்வித்துறைக்கு இணை அமைச்சர்களாக அன்னபூர்ணா தேவி, சுபாஸ் சர்கார், ராஜ்குமார் ரஞ்சன் ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் தேவேந்திர பிரதானின் மகனான தர்மேந்திர பிரதான் இதற்கு முன் பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்தார். அமைச்சரவை மாற்றத்தில் அவருக்குக் கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

2004-ம் ஆண்டு பிஹாரின் தியோகார்க் மக்களவைத் தொகுதி எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தர்மேந்திர பிரதான், 2009-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்தார், அதைத் தொடர்ந்து பாஜக தேசியச் செயலாளராகவும், பொதுச் செயலாளராகவும் உயர்த்தப்பட்டார்.

2012-ம் ஆண்டு பிஹாரிலிருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தர்மேந்திர பிரதான் தேர்ந்தெடுக்கப்பட்டு, 2014-ம் ஆண்டு பிரதமராக மோடி வந்தவுடன் பெட்ரோலியத்துறை அமைச்சராக தர்மேந்திர பிரதான் நியமிக்கப்பட்டார்.

2017-ம் ஆண்டு மத்திய அமைச்சர் மாற்றப்பட்டபோது, தர்மேந்திர பிரதான் தனிப்பரிவு அமைச்சராக உயர்த்தப்பட்டு, கூடுதலாகத் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் பிரிவும் வழங்கப்பட்டது.

பிரதமர் மோடி தலைமையில் 2019-ம் ஆண்டு அரசு அமைந்தபோது, பெட்ரோலியத்துறை அமைச்சராக தர்மேந்திர பிரதான் இருந்தார். கல்வித்துறைக்கு ரமேஷ் பொக்ரியால் நியமிக்கப்பட்டார். அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, அவர் கவனித்து வந்த கல்வித்துறை தர்மேந்திர பிரதானுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பங்காரு தொகுதி எம்.பி. சுபாஷ் சர்க்கார், பாஜக துணைத் தலைவர் அன்னபூர்ணா தேவி ஆகியோர் கல்வித்துறை இணை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியில் இருந்த அன்னபூர்ணா தேவி அந்தக் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்ததையடுத்து அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

மூன்றாவதாக, ராஜ்குமார் ரஞ்சன் சிங் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மணிப்பூரைச் சேர்ந்த ராஜ்குமார் ரஞ்சன், கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் 1972-ம் ஆண்டு புவியியல் பிரிவில் முதுகலை முடித்து, மணிப்பூர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் (நடுவில்) முன்னாள் அமைச்சர் மந்திரநாத், மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் (இடது).

மணிப்பூர் பல்கலைக்கழகத்தில் நில அறிவியல் பிரிவில் பேராசிரியராகப் பணியாற்றிய ராஜ்குமார், பல்கலைக்கழகத்தின் பதிவாளராக 2004 முதல் 2008-ம் ஆண்டுவரை இருந்தார். 2013-ம் ஆண்டு பாஜகவில் சேர்ந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய கல்வித்துறை அமைச்சராக தர்மேந்திர பிரதான் டெல்லியில் உள்ள தனது அலுவலகத்தில் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.

அப்போது அவர் கூறுகையில், “புதிய கல்விக் கொள்கையை அறிமுகம் செய்ததன் மூலம் இந்தியக் கல்வி முறை பிரம்மாண்டமான அடி எடுத்துவைத்துள்ளது. எதிர்கால இந்தியாவுக்கான சூழலை உருவாக்க வேண்டும். இந்தக் கொள்கையை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் வரவேற்றுள்ளன. ஒப்பிடமுடியாத அறிவார்ந்த சமூகத்தை நோக்கி இந்தியாவைக் கொண்டுசெல்ல இளைஞர்கள், மாணவர்கள் பங்கு முக்கியமாகும்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x