Published : 07 Jul 2021 05:01 PM
Last Updated : 07 Jul 2021 05:01 PM

 174 மாவட்டங்களில் மாறுபட்ட வகை கரோனா வைரஸ்: உறுதிப்படுத்தியது இன்சாகாக்

நாட்டில் 35 மாநிலங்களில் 174 மாவட்டங்களில் மாறுபட்ட வகை கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

இந்திய கரோனா மரபியல் கூட்டமைப்பு (இன்சாகாக்) என்பது, மத்திய அரசு கடந்தாண்டு டிசம்பர் மாதம் 30ம் தேதி நிறுவிய மரபியல் வரிசை ஆய்வகங்களின் தேசிய கூட்டமைப்பு ஆகும். ஆரம்பத்தில் இந்த தொகுப்பில் 10 ஆய்வகங்கள் இருந்தன. அதைத் தொடர்ந்து, இன்சாகாக் அமைப்பின் கீழ் உள்ள ஆய்வகங்களின் நோக்கம் விரிவுபடுத்தப்பட்டது.

இந்த தொகுப்பின் கீழ் தற்போது 28 ஆய்வகங்கள் உள்ளன. இவை, கரோனாவின் மரபியல் வேறுபாடுகளை கண்காணிக்கின்றன. கரோனா வைரஸின் பரவல் மற்றும் பரிணாமம், அதன் பிறழ்வுகள் மற்றும் அதன் விளைவாக வரும் மாறுபாடுகள் ஆகியவற்றை முழுமையாகப் புரிந்து கொள்வதற்காக, மரபணு தரவின் ஆழமான வரிசைமுறை மற்றும் பகுப்பாய்வு தேவை உணரப்பட்டது. இந்த பின்னணியில், கரோனா வைரஸின் முழு மரபணு வரிசைமுறையையும் நாடு முழுவதும் விரிவுபடுத்த இன்சாகாக் நிறுவப்பட்டது.

இது வைரஸ் எவ்வாறு பரவுகிறது மற்றும் உருவாகிறது என்பதைப் பற்றிய நமது புரிதலுக்கு உதவுகிறது. இன்சாகாக்-ன் கீழ் செயல்படும் ஆய்வகங்களில் செய்யப்பட்ட மாதிரிகளின் பகுப்பாய்வு மற்றும் வரிசைப்படுத்துதலின் அடிப்படையில் மரபணு குறியீட்டில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது வைரஸில் உள்ள பிறழ்வுகள் கண்டறியப்படுகின்றன.

கரோனா வைரஸ் மரபணுக்களை இந்தியா கடந்தாண்டு வரிசைப்படுத்த தொடங்கியது. ஆரம்பத்தில் இங்கிலாந்து, பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து வந்த அல்லது அந்த நாடுகள் மூலமாக மாறி வந்த சர்வதேச பயணிகளின் மாதிரிகளை தேசிய வைராலஜி மையம் (என்ஐவி), இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ஐசிஎம்ஆர்) ஆகியவை வரிசைப்படுத்தின.

ஏனென்றால் இந்த நாடுகளில் திடீரென கோவிட் பாதிப்பு அதிகரித்தது. இந்த நாடுகளில் இருந்து வந்தவர்களின் ஆர்டிபிசிஆர் பாசிட்டிவ் மாதிரிகள் முன்னுரிமை அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டன.

இந்த முறை, அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சில்(சிஎஸ்ஐஆர்), உயிரி தொழில்நுட்ப துறை, நோய் கட்டுப்பாட்டு தேசிய மையம் மற்றும் தனி நிறுவனங்களின் முயற்சிகளால் மேலும் விரவுபடுத்தப்பட்டது.

இந்தியாவின் ஆரம்ப கவனம், நாட்டில் உலகளாவிய மாறுபாடுகளின் பரவலை கட்டுப்படுத்துவதில் இருந்தது - ஆல்பா (பி .1.1.7), பீட்டா (பி .1.351) மற்றும் காமா (பி .1) வகை கொரோனாக்கள் அதிகம் பரவும் தன்மையுடையதாக இருந்தது. இந்த மாறுபட்ட வகை கரோனாக்களின் நுழைவை, இன்சாகாக் தீவிரமாக கண்காணித்தது. அதைத் தொடர்ந்து, டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் வகை கொரோனாக்களும் இன்சாகாக் ஆய்வகங்களில் நடத்தப்பட்ட முழு மரபணு வரிசைமுறை பகுப்பாய்வின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டன.

நாட்டில் 35 மாநிலங்களில், 174 மாவட்டங்களில், மாறுபட்ட வகை கரோனா வைரஸ்கள் கண்டறியப்பட்டன. அதிக எண்ணிக்கையிலான மாறுபாடுகள், மகாராஷ்டிரா, டெல்லி, பஞ்சாப், தெலங்கானா, மேற்குவங்கம் மற்றும் குஜராத்தில் கண்டறியப்பட்டன. இந்த மாறுபட்ட கரோனா மாதிரிகள், ஆல்பா, பீட்டா, காமா மற்றும் டெல்டா வகையை சேர்ந்தது.

மகாராஷ்டிராவில் முதலில் கண்டறியப்பட்ட B.1.617 வகையின் பாதிப்பு பல மாவட்டங்களில் வழக்கத்துக்கு அதிகமாக இருந்தது. இது தற்போது நாட்டின் பல மாநிலங்களில் காணப்படுகிறது.

B.1.617.2.1 (AY.1) என்ற வகை, பொதுவாக டெல்டா பிளஸ் மாறுபாடு என அழைக்கப்படுகிறது. இது டெல்டா மாறுபாட்டை கூடுதல் பிறழ்வுடன் குறிக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x