

கொல்கத்தா சிபிஐ அலுவலகம் முன் கடந்த மே மாதம் முதல்வர் மம்தா பானர்ஜி, சட்ட அமைச்சர் மோலோய் காடக் ஆகியோர் போராட்டம் நடத்திய விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து இன்று மனுவைத் தள்ளுபடி செய்தது.
நாரடா டேப் வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிர்ஹத் ஹகிம், சுப்ரதா முகர்ஜி, மதன் மித்ரா, கொல்கத்தா முன்னாள் மேயர் சோவன் சாட்டர்ஜி ஆகியோரை சிபிஐ அமைப்பு கடந்த மே 17-ம் தேதி கைது செய்தது.
இதையடுத்து, கொல்கத்தா சிபிஐ அலுவலகத்துக்கு முதல்வர் மம்தா பானர்ஜி, சட்ட அமைச்சர் மோலோய் காடக் ஆகியோர் சிபிஐ அலுவலகம் அமைந்துள்ள நிஜாம் பேலஸுக்கு வந்து போராட்டம் நடத்தினர்.
முதல்வர் மம்தா பானர்ஜி போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கிலான திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களும் திரண்டுவந்து போராட்டம் நடத்தினர். அந்த நேரத்தில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அதைக் கவனத்தில் கொள்ளாமல் ஏராளமானோர் கூடினர்.
இந்நிலையில் கொல்கத்தா நிஜாம் பேலஸ் பகுதியில் கடந்த மே 17-ம் தேதி முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் கூட்டம் கூடிப் போராட்டம் நடத்தப்பட்டது தொடர்பாக சுயசார்பு அமைப்பு மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரி சரத் சின்ஹா என்பவர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அதில், ''மேற்கு வங்கத்தில் மே 16-ம் தேதி முதல் பாதியளவு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்ட நிலையில், நிஜாம் பேலஸ் பகுதியில் அமைந்துள்ள சிபிஐ அலுவலகம் முன்பு ஆயிரக்கணக்கான திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் எவ்வாறு திரண்டார்கள்?
இந்த விவகாரம் தொடர்பாக சுயசார்பு அமைப்பு மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும், சட்டம்- ஒழுங்கைப் பராமரிக்காத போலீஸ் அதிகாரிகளைக் கண்டறிந்து அவர்கள் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மனு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.
இதற்கிடையே, நாரடா டேப் வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிர்ஹத் ஹகிம், சுப்ரதா முகர்ஜி, மதன் மித்ரா, கொல்கத்தா முன்னாள் மேயர் சோவன் சாட்டர்ஜி ஆகியோருக்குக் கடந்த மாதம் கொல்கத்தா உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்தச் சூழலில் விப்லாவ் சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், “கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்தின் முன் முதல்வர் மம்தா பானர்ஜி, சட்ட அமைச்சர் கோடக் ஆகியோர் போராட்டம் நடத்திய விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வினீத் சரண், தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் அமர்வில் இன்று விசாரிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், “இந்த மனு தொடர்பான விசாரணை ஏற்கெனவே கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது. இந்த விவகாரத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது” எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.