

மத்திய தகவல் ஆணையர் பதவி, மாநிலங்களில் உள்ள தகவல் ஆணையர் பதவி உரிய காலத்துக்குள் நிரப்பப்பட வேண்டும் என 2019்ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பு பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து மத்திய அரசும், மாநிலங்களும் அறிக்கை அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்டிஐ ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “ 2019-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பான மத்திய தலைமைத் தகவல் ஆணையர், மாநிலத் தகவல் ஆணையர் பதவி முறைப்படி உரிய காலத்துக்குள் நிரப்பப்படுகிறதா என்பதை அறிய வேண்டும்.
அந்தத் தீர்ப்பு முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்து, தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்தால், உரிய காலத்துக்குள் தகவல் ஆணையர்கள் வெளிப்படைத் தன்மையுடன் நிரப்பப்பட்டார்களா என்பதை அறிய வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.அப்துல் நசீர் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி அப்துல் நசீர், “ 2019-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பான உரிய காலத்துக்குள், வெளிப்படைத் தன்மையுடன் மத்திய தலைமைத் தகவல் ஆணையர், மாநிலத் தகவல் ஆணையர் பதவி நிரப்பப்படுகிறதா என்பது குறித்த அறிக்கையை மத்திய அரசும், மாநிலங்களும் அறிக்கையாக 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறேன்” எனத் தெரிவித்தார்.