தமிழக காவல்துறையினரிடையே கரோனா உயிரிழப்பைத் தடுப்பதில் சிறப்பாக செயல்பட்ட தடுப்பூசி: ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read


முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதில் அவர்கள் கரோனாவில் உயிரிழப்பது பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது என்று, தமிழக காவல்துறையினரிடையே நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

தமிழகக் காவல்துறையினருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதில், அவர் கரோனாவில் பாதிக்கப்படுவதும், அதனால் உயிரிழப்பதும் பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஐசிஎம்ஆர் ட்விட்டரில் பதிவிட்டகருத்தில் “ கரோனா தடுப்பூசி, முன்களப்பணியாளர்களிடையே சிறப்பாக செயலாற்றிவருகிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. தமிழக காவல்துறையினரிடையே நடத்தப்பட்ட ஆய்வில் ஒரு டோஸ் செலுத்தப்பட்டவர்களுக்கு 82 சதவீதம் பாதுகாப்பும், 2 டோஸ் செலுத்தப்பட்டவர்களுக்கு 92 சதவீதப் பாதுகாப்பும் கரோனா தொற்றிலிருந்து கிடைக்கிறது” எனத் தெரித்துள்ளது.

தமிழகக் காவல்துறை, ஐசிஎம்ஆர் அபைப்பின் தேசிய தொற்றுநோய் தடுப்பு அமைப்பு மற்றும் வேலூர் சிஎம்சி கல்லூரி ஆகியவை இணைந்து இந்த ஆய்வை நடத்தின. இந்த ஆய்வின் முடிவுகள் இந்திய மருத்துவ ஆய்வுஇதழில்(ஐஜேஎம்ஆர்) வெளியிடப்பட்டுள்ளது.

அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளதன் சுருக்கம் வருமாறு,

“ தமிழகத்தில் கடந்த பிப்ரவர் 1ம்தேதி முதல் மே 14ம் தேதிவரை ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 524 போலீஸார் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இதில் 32 ஆயிரத்து 792 பேர் ஒரு டோஸ் தடுப்பூசியும், 67 ஆயிரத்து 673 பேர் 2 டோஸ் தடுப்பூசியும் செலுத்தினர். அதேநேரம், 17ஆயிரத்து 59 பேர் தடுப்பூசி ஏதும் எடுக்கவில்லை.

இதில் ஏப்ரல் 13ம் தேதி முதல் மே 14ம் தேதிவை தமிழக காவல்துறையில் 31பேர் கரோனாவில் உயிரிழந்துள்ளனர். இதில், 4பேர் இரு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள், 7 பேர் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள், 20 பேர் தடுப்பூசி ஏதும் செலுத்தாதவர்கள் ஆவர்.

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் ஆயிரம் பேருக்கு கணக்கெடுத்துக் கொண்டால், தடுப்பூசி செலுத்தாவர்கள் மத்தியில் உயிரிழப்பு என்பது 1.17சதவீதமாகவும், ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மத்தியில் உயிரிழப்பு 0.21 சதவீதமும், 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களில் 0.06 சதவீதமாக இருக்கிறது.

இதன் மூலம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டர்களுக்கு கரோனா வைரஸ் மூலம் உயிரிழப்பு என்பது 82 சதவீதம் தடுக்கப்பட்டுள்ளது, இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு உயிரிழப்பு 95 சதவீதம் தடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல மருத்துவமனையில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு இடையே நடத்தப்பட்ட ஆய்விலும், இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டர்களுக்கு கரோனாவில் பாதிக்கப்பட்டாலும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது, ஆக்சிஜன் சிகிச்சை, ஐசியு சிகிச்சை போன்றவையும் தேவைப்படுவதில்லை. இவற்றுக்கு எதிராக தடுப்பூசி சிறப்பாகச் செயல்படுகிறது.

அதேசமயம், இந்தஆய்வு சில கட்டுப்பாடுகளுடன், வரையறைகளுடன் நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வயது, இணை நோய்கள் இருப்போர், இதற்கு முன் கரோனாவில் பாதிக்கப்படுவது போன்றவை கணக்கில் எடுக்காமல் தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரங்கள் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளன. அதேபோல தடுப்பூசி என்ற பொதுவான அடிப்படையில்தான் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது, குறிப்பிட்ட தடுப்பூசி என்ற பெயரில் ஆய்வு செய்யப்படவில்லை.

இந்தஆய்வின் முடிவில் ஒருவர் ஒருடோஸ் தடுப்பூசி செலுத்தியிருந்தாலே கரோனாவில் உயிரிழப்பதை தடுப்பதில் தடுப்பூசி சிறப்பாகச் செயல்படுகிறது. ஆதலால், மக்களிடையே தடுப்பூசி செலுத்துவதை அதிகப்படுத்த வேண்டும், தடுப்பூசி செலுத்துவதன் மூலம் உயிரிழப்பையும் தடுக்க முடியும், எதிர்காலத்தில் உருவாகும் பல்வேறு அலைகளில் இருந்தும் காத்துக்கொள்ள முடியும்

இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in