கூட்டுறவு அமைச்சகம்: புதிய அமைச்சகம் உருவாக்கிய மத்திய அரசு: அமைச்சரவை விரிவாக்கத்தில் புதிய அமைச்சர் நியமனம்
நாட்டில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தும் முயற்சியாக, கூட்டுறவு அமைச்சகம் என்ற பெயரில் மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு புதிய அமைசச்கத்தை உருவாக்கியுள்ளது என்று மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற இருக்கும் நிலையில், இந்த புதிய கூட்டுறவு அமைச்சகத்துக்கு புதிய அமைச்சர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து மத்திய அமைச்சரவைச் செயலாளர் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
கூட்டுறவு மூலம்தான் வளர்ச்சி என்ற தத்துவத்தை, தொலைநோக்கை வலுப்படுத்தும் நோக்கில் புதிதாக கூட்டுறவு அமைச்சகத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. மத்திய அரசின் இந்த முயற்சி வரலாற்று நிகழ்வாகும்.
நாட்டின் கூட்டுறவு அமைப்பை வலுப்படுத்த கூட்டுறவு அமைச்சகத்துக்காக தனி நிர்வாக அமைப்பு, சட்டவடிவம், கொள்கை வடிவமைப்பு போன்றவை உருவாக்கப்படும். இந்த புதிய கூட்டுறவு அமைச்சகத்துக்காக தனியாக அமைச்சர் நியமிக்கப்படுவார்.
நாட்டில் அடிமட்ட அளவில் செயல்படும் கூட்டுறவு அமைப்புகளை வலுப்படுத்தவும், தேவையான உதவிகளை செய்யவும் இந்த துறை செயல்படும். நம்முடைய தேசத்தில், கூட்டுறவு அடிப்படையிலான பொருளாதார மேம்பாட்டு மாதிரி மிகவும் பொருத்தமானது, அங்கு ஒவ்வொரு உறுப்பினரும் பொறுப்புணர்வுடன் செயல்படுகிறார்கள்
கூட்டுறவுத்துறையில் எளிதாக தொழில் செய்யும் விதம், பன்முக மாநில கூட்டுறவு வளர்ச்சி ஆகியவற்றை ஒழுங்குபடுத்த கூட்டுறவு அமைச்சகம் நடவடிக்கை எடுக்கும்.சமுதாய அடிப்படையிலான வளர்ச்சியை உருவாக்குவதில் மத்திய அரசு ஆழ்ந்த ஈடுபாடு கொண்டுள்ளது
. மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, கூட்டுறவு துறைக்கு புதிய அமைச்சகம் உருவாக்கப்படும் என்ற அறிவிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
