

ஜம்முவில் சமீபத்தில் நடந்த ட்ரோன்தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே இதுபோன்ற தாக்குதல்களை எதிர்கொள்ள இந்திய விமானப் படை 10 ட்ரோன் தாக்குதல் தடுப்பு சிஸ்டம்களை வாங்க முடிவு செய்துள்ளது.
இந்த ஆன்டி-ட்ரோன் சிஸ்டம்களை வாங்குவதற்கான திட்டம் குறித்த தகவல் அறிக்கை திங்களன்று வெளியிடப்பட்டது. அதில் ‘புதிதாக வாங்கப்பட உள்ள பிரதான ஆன்டி-ட்ரோன் ஆயுதம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட லேசர் அடிப்படையில் நேரடி தாக்குதல் நடத்தும் ஆயுதமாக இருக்கும்’ எனக் கூறப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படை இந்த ட்ரோன் தாக்குதல் தடுப்பு சிஸ்டம்களை வெவ்வேறு விமானப்படைத் தளங்களில் நிறுவ உள்ளது. எனவே இந்த சிஸ்டம்களை தயாரிக்கும் நிறுவனங்களிடம் மல்டி-சென்சார், மல்டி-கில் அம்சங்கள் கொண்டவையாக இருக்குமாறு கேட்டுள்ளது.
மேலும் விமானப்படையின் எந்த தளத்திலும் பயன்படுத்தும் வகையில், இந்த 10 ட்ரோன் தாக்குதல் தடுப்பு சிஸ்டம்களும் எளிதில் எடுத்துச் செல்லும் வகையிலான வாகனங்களில் மொபைல் வசதியுடன் எந்த இடத்திலும் நகரும்திறனுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. அதேபோல் இந்த வாகனங்களிலிருந்து அனைத்து உப சிஸ்டம்களையும் எளிதில் பிரித்து அவற்றை தரையிலோ அல்லது மேற்கூரையிலோ பொருத்தும் வகையில் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இவை ட்ரோன்கள் அனுமதிக்கப்படாத பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் நுழையும் ட்ரோன்களை அடையாளம் கண்டுஎச்சரிக்கை செய்யும் வகையில் இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.