

கேரளாவில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் சிகிச்சைக்காக ஒரே வாரத்தில் பொதுமக்கள் ரூ.18 கோடி நன்கொடை வழங்கியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளமாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டூல் பகுதியைச் சேர்ந்தவர் ரபீக். இவரது மனைவிமரியும்மா. இவர்களின் 2-வது குழந்தை முகம்மதுக்கு ஒன்றரை வயது ஆகிறது. குழந்தைக்கு முதுகெலும்பு தசை நார் சிதைவு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மரபணு குறைபாடு சார்ந்த இந்த அரிய வகை நோய்க்கு 2 வயதுக்குள் மருந்து செலுத்திக்கொண்டால் மட்டுமே, முழுமையாக குணப்படுத்த முடியும். ‘ஜோல்ஜென்ஸ்மா' எனப்படும் அந்த மருந்துதான் உலகிலேயே அதிக விலையுடைய மருந்தாகவும் கருதப்படுகிறது. குழந்தை முகம்மதுவின் சூழலை விளக்கி நன்கொடை அளித்து உதவுமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டது.
தனியொரு குடும்பத்தால் இது சாத்தியமில்லை என்பதால் மட்டூல் பஞ்சாயத்து நிர்வாகம், சட்டப்பேரவை உறுப்பினர் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் சார்பில் குழந்தையின் உயிரைக் காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டதுடன் இதற்கென தனி வங்கிக் கணக்கும் தொடங்கப்பட்டது. இவ்விஷயம் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியது. இதனைத் தொடர்ந்து சிறுவன் முகம்மதுவுக்கு பலரும் நேசக்கரம் நீட்டினர். இதனால் ஒரே வாரத்தில் ரூ.18 கோடி நிதி திரண்டது.
அதிலும் வளைகுடா நாடுகளில் வசிக்கும் மலையாளிகள் தாராளமாக நிதி உதவி வழங்கினர்.போதுமான நிதி கிடைத்துவிட்டதால், இனி யாரும் பணம் அனுப்பவேண்டாம் என நிதி திரட்ட அமைக்கப்பட்ட குழுவினர் அறிவித்தனர்.
அதன் பிறகும் பலர் நிதி உதவி செய்து வருவதால், அதை அந்தக் குழந்தையின் சகோதரியின் சிகிச்சைக்கு பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். முகம்மதுவின் சகோதரி அப்ராவுக்கு 15 வயது ஆகிறது. அவரும் இதே நோயால் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் தனது வாழ்வை நகர்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.