

மகாராஷ்டிர சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது.
அவைத் தலைவர் பொறுப்பை தேசியவாத காங்கிரஸைச் சேர்ந்த பாஸ்கர் ஜாதவ் தற்காலிகமாக வகித்தார். அப்போது அவர், “இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உள்ளாட்சித் தேர்தலில் இடஒதுக்கீடு அளிக்க வேண்டி உள்ளதால், 2011-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு வழங்கக் கோரும் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும்" என அறிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்எல்ஏக்கள், அவைத் தலைவரை சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவைத் தலைவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறி, பாஜக எம்எல்ஏக்கள் க்ரிஷ் மகாஜன், சஞ்சய் குடே, ஆசிஷ் ஷெலார் உள்ளிட்ட 12 பேர் பேரவைக் கூட்டத்தொடரில் இருந்து ஓராண்டுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இதைக் கண்டிக்கும் விதமாக, சட்டப்பேரவைக் கட்டிடத்திற்கு எதிரிலேயே, முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக எம்எல்ஏக்கள் நேற்று போட்டி சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்தினர்.
அப்போது தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. எங்கு பார்த்தாலும் லஞ்சமும், ஊழலும் மலிந்துள்ளது. இதுகுறித்து கேள்வி கேட்கவே பாஜக எம்எல்ஏக்கள் முயன்றனர். ஆனால், பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி எங்கள் கட்சிஎம்எல்ஏ-க்களை அரசு இடைநீக்கம் செய்துள்ளது. இந்த அடக்குமுறையை கண்டு பாஜக ஒருபோதும் பின்வாங்காது" என்றார்.