

கல்பனா சாவ்லாவுக்கு அடுத்தபடியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிரிஷா பந்த்லா விண்வெளிக்கு பயணம் செய்ய உள்ளார்.
அமெரிக்காவின் வர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தின் விஎஸ்எஸ்யூனிட்டி விண்வெளி ஓடம், நியூ மெக்சிகோவிலிருந்து வரும் 11-ம்தேதி விண்வெளிக்கு பயணம் செய்கிறது. இதில் வர்ஜின் கேலக்டிக் நிறுவனர் ரிச்சர்டு பிரான்சன், இந்திய வம்சாவளி பெண் சிரிஷா பந்த்லா (34) உட்பட 6 பேர் பயணிக்க உள்ளனர்.
ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் பிறந்த சிரிஷா, அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரில் வசித்து வருகிறார். இதன் மூலம் கல்பனா சாவ்லாவுக்குப் பிறகு விண்வெளிக்கு செல்லும் 2-வது இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமை சிரிஷாவுக்கு கிடைக்க உள்ளது.
இதுகுறித்து விமான பொறியியல் பட்டதாரியான சிரிஷா தனதுட்விட்டர் பக்கத்தில், “யூனிட்டி விண்வெளி ஓடத்தில் பயணம் செய்யகிடைத்த வாய்ப்பை பெருமையாகக் கருதுகிறேன். அனைவருக்கும் விண்வெளிக்கு பயணம் செய்யும் வாய்ப்பை வழங்க திட்டமிட்டுள்ள நிறுவனத்தின் ஒரு அங்கமாக நான் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என பதிவிட்டுள்ளார்.
சிரிஷாவின் தந்தை வழி தாத்தா டாக்டர் ராகய்யா பந்த்லாகூறும்போது, “எனது 2-வது பேத்திவிண்வெளிக்கு பயணம் செய்யஇருப்பது மிகவும் மகிழ்ச்சியாகஉள்ளது. சிரிஷா குழந்தையிலிருந்தே துணிச்சல் மிக்கவராக திகழ்ந்து வருகிறார். உறுதியான முடிவை எடுப்பதில் வல்லவர். அமெரிக்க பள்ளியில் படித்த அவர், விண்வெளி பற்றிய தகவலை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டி வந்தார்” என்றார்.