

ஜெர்மனியில் கொலோன் பல் கலைக்கழகத்தின் தமிழ்த் துறைக்கு உருவான நிதிப் பற்றாக்குறையால், கடந்த 2014-ல் துறை தமிழ்ப் பேராசிரியர் உல்ரிக்க நிக்லாஸ், செப்டம்பர் 2020-ல் ஓய்வு பெற்ற பின் தமிழ்ப் பிரிவை மூடுவதாக நிர்வாகம் அறிவித்தது. ஆனால், அமெரிக்க வாழ் இந்தியர்கள் 2018-ல் திரட்டி அளித்த நிதியால், மூடும் முடிவு தள்ளிப் போனது.
இதன் பலனாக, பேராசிரியர் உல்ரிக்குடன் உதவிப் பேராசிரியர் ஸ்வென் வொர்ட்மான் எனும் ஜெர்மனியரும் நிரந்தரப் பணியில் தொடர்ந்தனர். நிதிபற்றாகுறையில் பாதி தொகையான ரூ.1 கோடியே 24 லட்சத்தை தமிழக அரசு அளிப்பதாக 2019-ல் கூறியது. இதை அங்கிருந்து கொலோன் வந்த தமிழ் வளர்ச்சிக் கழகத்தினரும் உறுதி செய்தனர். கரோனா பரவலால் உருவான நிதிப் பற்றாக்குறை மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகளால் அந்த தொகையை தமிழக அரசால் அளிக்க முடியவில்லை.
எனவே, கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் உதவிப் பேராசிரியர் வொர்ட்மானை பணி நீக்கம் செய்து தமிழ்ப் பிரிவை மூட கொலோன் பல்கலைக்கழகம் முடிவு செய்தது. இதை தடுக்க ஜெர்மனியின் 8 நகரத் தமிழர்கள், ’ஐரோப்பிய தமிழர்கள் கூட்டமைப்பு’ எனும் அமைப்பை துவக்கினர். இவர்கள் சார்பில் உலக தமிழர்களிடம் இிருந்து சுமார் 23 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலிக்க முடிந்தது. இதன் மீதான செய்திகள் பிப்ரவரி 27 முதல் ‘இந்து தமிழ்’ நாளிதழில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
தமிழகத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், கொலோன் பல்கலைக்கழகத்திற்கு ரூ.1.20 கோடி அளித்து உதவ வேண்டும் என்று அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வலியுறுத்தினார். தற்போது மு.க.ஸ்டாலின் முதல்வரான பிறகும் தமிழ்த் துறைக்கு பலன் கிடைக்கவில்லை என்கின்றனர்.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் ஐரோப்பியக் கூட்டமைப்பின் முக்கிய நிர்வாகி யும் மூன்சென் நகரத் தமிழ் சங்கத் தலைவருமான பி.செல்வகுமார் தொலைபேசியில் கூறும்போது, ‘‘கடந்த ஆண்டு நவம்பரில் தமிழ் துறைக்கான நிதி கொலோன் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் காலியாகி விட்டது. அதன் பிறகு இதுவரையும் செலவான ரூ.20 லட்சத்தை நம் கூட்டமைப்பு வசூலித்த நிதியில் இருந்து சமாளிக்கலாம். இதனால், செப்டம்பரில் தமிழ் துறையை மூடிவிடும் நிலை உருவாகி உள்ளது. தமிழக அரசின் நிதி கிடைத்தால் அது ஜூன் 2022 வரை தொடர வழிவகுக்கும்’’’ எனத் தெரிவித்தார்.
கொலோன் பல்கலைக் கழகத்தில் இந்தியவியல், தமிழி யல் ஆய்வு நிறுவனம்1963-ல் துவக்கப்பட்டது. இதை தமிழ் பயின்று தமிழறிஞரான க்ளவுஸ் லுட்விட் ஜெனரட் எனும் ஜெர்மனியர் நிறுவினார். தமிழகத்திற்கு வெளியே உள்ள இரண்டு பெரிய நூலகங்களில் சிகாகோவுடன், கொலோனும் ஒன்றாக உள்ளது.