

கர்நாடக உள்ளாட்சி தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான மாவட்ட, வட்ட பஞ்சாயத்துகளில் வெற்றிபெற்றுள்ளது. சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வென்ற பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு (மாவட்ட, வட்ட பஞ்சாயத்துகள்) கடந்த 13, 20-ம் தேதிகளில் 2 கட்டமாக நடந்த தேர்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவாயின. இந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ், எதிர்க் கட்சிகளான பாஜக, மஜத ஆகிய மூன்று கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டதால் மும்முனைப் போட்டி நிலவியது.
நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன. தொடக்கத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி மைசூரு, மண்டியா, சாம்ராஜ் நகர்,பெல்லாரி பெங்களூரு ஊரகம் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங் களில் முன்னிலை வகித்தது. எதிர்க்கட்சி யான பாஜக உடுப்பி, தக்ஷின கன்னடா, தாவணகெரே ஆகிய மாவட்டங்களில் முன்னிலை வகித்தது. மஜத ஹாசனில் மட்டும் முன்னிலை வகித்தது.
மொத்தமுள்ள 922 மாவட்ட வார்டுகளில் காங்கிரஸ் 498, பாஜக 408, மஜத 148, மற்றவை 29 இடங்களில் வெற்றி பெற்றன. இதே போல 3,884 வட்ட வார்டுகளில் காங்கிரஸ் 1703, பாஜக 1363, மஜத 609, மற்றவை 209 இடங்களில் வெற்றி பெற்றன.
சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றிய பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மஜதவும் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப் பட்ட இந்த தேர்தலில் காங்கிரஸ் முதலிடத்தை கைப்பற்றி இருப்பதால் முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஷ்வர் உள்ளிட்ட தலைவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.